பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனங்கள், பாரம்பரிய இரும்பு எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக புதிய காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
‘பாரத்கேஸ் லைட் ஜிப்’ மற்றும் ‘ஹெச்பி நாவ்யா’ என்ற பெயர்களில் அறிமுகமாகியுள்ள இந்த சிலிண்டர்கள், ஃபைபர் கிளாஸ் மற்றும் பாலிமர் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கமான இரும்பு சிலிண்டர்களுடன் ஒப்பிடும்போது சுமார் 50 சதவீதம் வரை எடை குறைவாக இருப்பதால், அனைத்து வயதினரும் எளிதாகக் கையாள முடியும்.
இந்த காம்போசிட் சிலிண்டர்களின் முக்கிய சிறப்பம்சம், ஒளி ஊடுருவக்கூடிய வெளிப்புற அமைப்பாகும். இதன் மூலம் சிலிண்டரைத் திறக்காமலோ அல்லது கூடுதல் கருவிகள் இல்லாமலோ, உள்ளே எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை வெளியில் இருந்தே எளிதாகக் காண முடியும்.
மேலும், துருப்பிடிக்காத தன்மை, அதிக பாதுகாப்பு மற்றும் வெடிப்பு அபாயத்தை குறைக்கும் வகையிலான வடிவமைப்பு ஆகிய அம்சங்களும் இந்த புதிய சிலிண்டர்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் வீட்டு உபயோகத்திற்கும் வணிக பயன்பாட்டிற்கும் பாதுகாப்பான மாற்றாக இவை கருதப்படுகின்றன.
எடை குறைவு, எளிதான பயன்பாடு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களால், இந்த புதிய காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்கள் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




