ஒரு பணக்காரர் பத்தாயிரம் பொற்காசுகளுடன் கோவிலுக்கு வந்தார். உலகின் அந்தப் பகுதிக்கு அது மிகப் பெரிய தொகையாக இருந்தது. அதை அவர் கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுக்கச் சென்றார் . ஆனால் பாதிரியாரோ, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போல் ஏற்றுக் கொண்டார்.
அந்த மனிதர் கவலையுற்றார். “இவை பத்தாயிரம் பொற்காசுகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.
பாதிரியார் அவரைப் பார்த்தார்.
அந்த மனிதர் மீண்டும் பேசலானார், “பத்தாயிரம் பொற்காசுகள் பெரிய தொகை. நான் மிகப் பெரிய பணக்காரன், ஆனால் எனக்கு அந்தத் தொகை மிகப் பெரியது” என்றார்.
பாதிரியார், “ இதையே பல விதமாக, பல வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள். நானும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். நான் என்ன செவிடு என்று நினைக்கிறீர்களா?” என்றார்.
அந்த மனிதர் எதிர்பார்ப்பது “நன்றி” என்ற ஒரு சொல்தான். வேறொன்றும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
பாதிரியார், “உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு பாராட்டு வேண்டுமா? நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்றெல்லாம் கேட்டார்.
அந்த மனிதர், “குறைந்த பட்சம் அதையாவது எதிர்பார்க்கலாமே” என்றார்.
பாதிரியார், “உங்கள் தங்கக் காசுகளை நீங்கள் திரும்ப எடுத்துச் செல்லுங்கள். அல்லது, இந்தக் கோயிலுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டுமானால், நான் அவற்றை ஏற்றுக் கொண்டதற்கு நீங்கள் தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.
“கொடுப்பவர் நன்றியுணர்வுடன் கொடுத்தால் தான், அது பகிர்வாகிறது” என்று கோவிலில் கூட எழுதப்பட்டிருக்கிறது…
நம் அன்பளிப்பை யாராவது ஏற்றுக் கொண்டால், அந்த அன்பளிப்பின் மூலம் அவர்கள் நம்மையே ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். அது ஒரு சிறந்த அனுபவம். ஏனெனில், ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாததால், அவர்கள் அதை எளிதாக மறுத்திருக்கலாம்.
அதனால் தான் கொடுப்பவர் நன்றியுணர்வுடன் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அது ஒரு பகிர்வாகும்.
“நன்றி” கோரப்படும் போதோ அல்லது எதிர்பார்க்கப்படும் போதோ, அன்பளிப்பு பேரமாகிவிடும்.
நீதி:
“பகிர்தலே அக்கறை” என்று நாம் அனைவரும் அறிவோம். பிறரிடம் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்க வேண்டும். பகிர்தல் என்பது பிறரிடம் மகிழ்ச்சியைப் பரப்பி, தன்னலமற்றவராகப் பிறருக்கு சேவை செய்தலாகும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் சுய முன்னேற்றத்திற்கும் இது உதவுகிறது. நாம் நம்முள் பச்சாதாபம் என்ற பண்பை வளர்த்துக் கொள்ளத் துவங்கினால், பிறர் மேல் நிபந்தனையற்ற அக்கறையை செலுத்துவோம். பகிர்தலினால் உண்டாகும் தன்னலமற்ற மனப்பான்மை அனைவராலும் மெச்சப்படுகிறது. மேலும், பகிர்தல் என்பது, நமக்கு சமுதாயத்தின் மேல் ஒரு பொறுப்புணர்வை உண்டாக்குகிறது. நாம் பகிரும் போது அக்கறை என்னும் மனப்பான்மை வெளிப்படுகிறது. மேலும் நமது நேர்மறையான அதிர்வுகளால், மக்கள் நம்மைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள். ஒரு பெரிய நன்மைக்காக தியாகம் செய்ய கற்றுக் கொண்டால், அது நமக்கு பணிவை பெற்றுத் தரும்.




