
ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான் (Men will be Men) என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
வருடங்கள் வளர, அதிகரிக்கும் பாசப்பிணைப்பு.
உனக்கில்லாததா…, எது வேணுமானாலும் எடுத்துக்கோ, என்று சொல்லும் மனம்.
ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் மறந்து வைத்து விட்ட, லட்டு டப்பாவை, அம்மாவிடம் சொல்லி திட்டு வாங்க வைக்காமல், ரகசியமாக கூரியரில் அனுப்பி ஆனந்தப்படும் ஆத்மா.
ஆண் என்ற கர்வம் அழிந்து விடும்.
தாய்மையில் உள்ளம் தளும்பும்.
தெரிந்திருக்குமே…. நான் யாரை சொல்கிறேன் என்று.
உங்கள் யூகம் சரியே! அவர்தான் “அப்பா “
ஒரு ஆண், தன் தாயிடம், சகோதரியிடம், மனைவியிடம் கொண்டிருக்கும் பாசம் சூழ்நிலைகளால் மாறலாம்.
சமயத்தில் அன்பை, பாசத்தை வெளிக்காட்ட இடம், பொருள், ஏவல் பார்க்க வேண்டியும் இருக்கலாம்.
ஆனால் மகள் மீது பாசமழை பொழிய எந்த அப்பாவிற்கும் எந்நாளும் எந்த தடங்கலும் இல்லை.
ஆண் தாய், தமக்கை, தாரம் இவர்களிடம் கொண்ட அன்பு நிலவு போல் வளர்ந்து… தேயலாம். மீண்டும் வளரலாம்.
ஆனால் அப்பாவாக, மகள் மீது கொண்ட பாசத்திற்கு எப்பொழுதும் வளர்பிறை தான்.
மகளின் ஆசைக்காக, லட்சியத்துக்காக உழைக்கும் பிறவி.
எவ்வளவு அழுத்தமான ஆளாக இருந்தாலும் மகளின் திருமணம் முடிந்து, பிரிந்து செல்கையில்
இந்த மனுஷனுக்கும், உள்ள இவ்ளோ இருந்திருக்கு பாரேன்…
என்று ஊரே வியக்கும் வகையில் சிறு பிள்ளை போலவே கண்ணீர் வழிய…
ஹும்…அதெல்லாம் சொன்னால் புரியாது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கல்லுக்குள் ஈரம்.
Men will be men
முன்பெல்லாம் அம்மாவும் கண் கலங்குவார்களாம்.
தன் மகளும், அம்மியில் அரைத்து, விறகில் சமைத்து என்று நினைத்துக் கொள்வார்களோ!
இப்போ “ஸ்மார்ட் கிச்சன்” இருப்பதால் மட்டுமல்ல, தன் மகள் தான் அங்கு ராணி, தானே மதியூக மந்திரி என்றும் தெரியுமே!
ஆனால் வெள்ளந்தியான அப்பாக்கள்,
இராமாயண காலத்திலிருந்து இன்றுவரை தொட்டு தொடரும் பாசப் பாரம்பரியமாய், மகள் புகுந்த வீடு (அது பக்கத்து வீடாகவே இருந்தாலும்) செல்லும் பொழுது, கண் கலக்குவது.
முரடன் முத்துவோ, பால் வடியும் பாலுவோ… யாராயினும், மகள் புகுந்த வீடு புறப்படும் பொழுது செய்யும் அட்டகாசம் இருக்கிறதே அப்பப்பா.