கடவுளின் மிக சிறந்த பரிசு எது? நம்மை புரிந்து கொள்ளும் அன்பான உறவுகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

படித்து சிந்திக்க

கடவுளின் மிக சிறந்த பரிசு எது?

 

நம்மை புரிந்து கொள்ளும் அன்பான உறவுகள்…

 

என் மகள் ஆர்த்திக்கு ஐந்து வயதானது. என் ஒரே மகள். அவள் பிறந்த நாளிற்காக என் நண்பன் கேசவனிடன் வாங்கிய கடனில் என்னால் 200 ருபாய் ஃபிராக், 20 ரூபாய் கேக், 10 ரூபாய் சாக்லேட் ,20 ரூபாய் பொம்மை மட்டும் வாங்க முடிந்தது.

 

வீட்டிற்கு வந்த போது அவள் தோழி பொன்னியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் வீட்டிற்குள் நுழைந்ததும், ”ஐ அப்பா ” என்று ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.

 

அவளிடம் உடை மற்றும் பொம்மையை கொடுத்தேன்.

 

‘புடிச்சிருக்கா? ஆர்த்தி என்றேன் .

 

எனக்கு இந்த பொம்மை வேண்டாம்பா.

 

ஏன் வேண்டாம் ஆர்த்தி? இது நல்லா இல்லியா.

 

இதை கடைல திருப்பி கொடுத்துட்டு , பொன்னி போட்டிருக்கால அதே மாதிரி ஜல் ஜல் கொலுசு வாங்கிட்டு வாங்கப்பா.

 

அது வேண்டாம் ஆர்த்தி. கால்ல குத்தி புண்ணு வந்துடும். இந்த பொம்மை அழகா இருக்கு பாரு. பாப்பா மாதிரி வச்சு விளையாடு.

 

‘எனக்கு அது தான் வேணும் என்று அழத் தொடங்கினாள்.

 

நாளைக்கு வாங்கிட்டு வருகிறேன் செல்லம்.

 

இன்னைக்கே கொலுசு வேணும் என்று கத்தி அழத் தொடங்கினாள்.

 

எதுக்கு அவளை பொறந்தநாள் அதுவுமா அழவச்சுட்டு இருக்கீங்க. மனைவியின் குரல் .

 

சரிமா வாங்கிட்டு வரேன் என்று வெளியே கிளம்பினேன் .

 

அப்போதும் என்னிடம் சரியாக 30 ருபாய் இருந்தது.

 

வெள்ளிக் கொலுசின் விலை கேட்டேன், 2000 என்றார்கள். வெள்ளி அல்லாத போலி கொலுசு கூட 100 ரூபாய்க்கு மேல் சொன்னார்கள் .

 

கடைவீதியில் மண் உண்டியல் 30 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வீடு வந்தேன். ஆர்த்தி தூங்கி இருந்தாள் .

 

விடிந்ததும் ”ஜல் ஜல் கொலுசு வேணும்பா” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

 

நான் ஒரு மேஜிக் பொருள் வாங்கிட்டு வந்திருக்கேன். அது வச்சு நாம என்ன வேணா வாங்கலாம். தெரியுமா? ‘

 

என்ன மேஜிக் பா?

 

இங்க பாரு உண்டியல்.

 

இதுல இருந்து கொலுசு வருமா?

 

ஆமா ஆர்த்திமா, இதை சாமி பக்கத்துல வச்சிடணும், டெய்லி உள்ள காசு போடணும். ஃபுல் ஆனதும் இதை உடைச்சா நிறைய காசு கிடைக்கும். நமக்கு என்ன வேணுமோ வாங்கிக்கலாம்.

 

எங்கள் கம்பெனியில் மாலை 4 மணி ஆனதும் கேசவன் டீ குடிக்கக் கூப்பிடுவான். அவன் சிகரெட் பிடித்து விட்டு டீ குடிப்பான். நானும் டீ குடித்துவிட்டு 10 ருபாய் கொடுத்து விடுவேன்.

 

உண்டியல் வாங்கிய மறுநாள் என்னை கூப்பிட்டான் .

 

அருண் , டீ குடிக்கப் போகலாம் வா.

 

இல்ல கேசவன். டீ குடிக்கறதை நிறுத்தப்போறேன். அடிக்கடி தலை சுத்தற மாதிரி இருக்கு.

 

சரிப்பா , விட்டுடு . அதுவும் நல்லது தான்.

 

டீ குடிக்காமல் வைத்திருந்த காசை வீட்டுக்கு வந்து ஆர்த்தியின் கையால் உண்டியலில் போடச் செய்வேன்.

 

அந்த சில்லறைகள் ”க்ளிங்” என்ற சத்தத்துடன் விழுவதை கேட்டு சிரிப்பாள்.

 

இது தினமும் நடந்தது. நாட்கள் கடந்தன. கேசவன் வேறு கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டான்.

 

நான் டீ குடிக்காமல் சேமித்த காசுகள் உண்டியலில் நிறைந்தன. ஆர்த்தி உண்டியலை குலுக்கி அந்த சத்தத்தைக் கேட்டு ரசிப்பாள்.

 

இந்த சத்தம் கூட ஜல் ஜல் கொலுசு சத்தம் மாதிரியே கேக்குதுப்பா. பொன்னி போட்டு நடக்கற மாதிரி எனக்கும் வாங்கிக் குடுங்கப்பா.

 

உண்டியல் நிறையட்டும் ஆர்த்தி. நாம் காச எடுத்துட்டு போயி வாங்கிக்கலாம்.

 

அது தோராயமாக 2000 வந்திருக்கும் என்று ஒரு நாள் தோன்றியது.

 

ஆர்த்திமா உண்டியலை உடைச்சு எண்ணி பாக்கலாமா.

 

ஐ ஜாலி, ஜல் ஜல் கொலுசு வாங்கப் போறேனே

 

உடைத்து எண்ணினேன். 2030 ருபாய் இருந்தது.

 

நானும் ஆர்த்தியும் கிளம்பினோம், 2000 சில்லறையை, ஒரு மாளிகைக்கடையில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டாக மாற்றிக் கொண்டோம்.

 

அப்பா இந்த ஒரே ஒரு பிங்க் கலர் பேப்பர் காசு கொடுத்தா, ஜல் ஜல் கொலுசு கொடுப்பங்களா.

 

ஆமாம் ஆர்த்திமா.

 

இதை நானே , பத்திரமா வச்சுகிறேன் . கடைல இருக்கற அங்கிள் கிட்ட நானே கொடுக்கறேன்.

 

சரி செல்லம் பத்திரமா வச்சுக்கோ.

 

தன் ஸ்கர்ட் பாக்கெட் உள்ளே வைத்துக் கொண்டாள்.

 

பேருந்து நிறுத்தம் சென்று காத்திருந்தோம்.

 

எங்களை கடந்து சென்ற ஆட்டோவில் தெரிந்த முகம். கேசவன்.

 

சிறிது தூரம் சென்ற ஆட்டோ அங்கேயே நின்றது. நான் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு ஆட்டோக்கு அருகில் சென்றேன் .

 

கேசவன் இறங்கினான்.

 

கேசவா, புது வேலைக்கு போனதும் மறந்துட்டியே போன் பண்ணறதுக்கு கூட நேரம் இல்ல உனக்கு. நான் ஒருநாள் பண்ணேன். நீ அப்போவும் எடுக்கல.

 

இல்ல அருண் போன் பண்ணனும் தான் நினைப்பேன். அந்த நேரம் வேற ஏதாவது வேலை வந்துடும். அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுட்டுடுவேன். ஆர்த்தி நல்லா இருக்கியா?

 

நல்லா இருக்கேன் அங்கிள்.

 

ஆட்டோல யாரு? ஹரிணியா எப்படி இருக்க ஹரிணி?

 

நல்லா இருக்கேன் அங்கிள்.

 

ஆர்த்திமா ஹரிணி அக்காக்கு ஹாய் சொல்லு.

 

ஹாய் ,அக்கா எப்படி இருக்கீங்க.

 

நான் நல்லா இருக்கேன் ஆர்த்தி, நீ எப்படி இருக்க?

 

நல்லா இருக்கேன் அக்கா.

 

ஹரிணி ஆர்த்தியை விட மூன்று வயது பெரியவள்.

 

அருண் ஒரு பிரச்சனை ஆயிடுச்சு. ஒரு ஆக்ஸிடெண்ட்.

 

என்ன ஆக்சிடென்ட்? யாருக்கு என்ன ஆச்சு?

 

ஹரிணியோட வலது கால்ல ஒரு கார் ஏத்திட்டு போயிட்டான். ஒரு மாசம் முன்னாடி.

 

கேசவன் ஹரிணியின் வலது காலை காட்டினான். முழங்கால் பகுதியில் இருந்து அவள் கால் இல்லை.

 

அதிர்ச்சியாக இருந்தது .

 

செக்கப் தான் போயிட்டு வறோம். அந்த கால் மாதிரி அளவெடுத்து செஞ்சு ஹாஸ்பிடலியே கொடுப்பங்களாம். கொஞ்சம் பணம் தேவைப்படுது. உன்கிட்ட இருந்தா கடனா தரமுடியுமா’?

 

கேசவா இப்படி கேட்டுட்டியே. உன்கிட்ட எத்தனை முறை கடன் வாங்கி இருக்கேன். என்கிட்ட இருந்தா கொடுக்காம இருப்பேனா?

 

நான் ஆர்த்தியை பார்த்தேன். ஆர்த்தி என்னை பார்த்தாள் .

 

தன் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து 2000 ரூபாயை கேசவனிடம் நீட்டினாள்.

 

அங்கிள் இந்த காசை டாக்டர் கிட்ட கொடுத்து ஹரிணி அக்கா கால் சரி பண்ண சொல்லுங்க’ என்றாள்.

 

தேங்க்ஸ் ஆர்த்தி , தேங்க்ஸ் அருண். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ திருப்பி கொடுத்துடறேன்.

 

அப்புறம் பாத்துக்கலாம் கேசவா மெதுவா குடு.

 

அவர்கள் ஆட்டோ கிளம்பி சென்றது .

 

ஆர்த்தி நீ ரொம்ப குட்கேர்ள் ஆயிட்டே.

 

ஹரினி அக்கா பாவம் பா. அதான் கொடுத்தேன். உங்க கிட்ட 30 ரூபீஸ் இருக்குல்ல. அதுல மேஜிக் உண்டியல் வாங்கி டெய்லி காசு சேர்த்து ஜல் ஜல் கொலுசு வாங்கிக்கலாம் ”

 

ஓகே டா செல்லம்.

 

ஆர்த்தியின் கள்ளமில்லா சிரிப்பை கண்டதும் கண்கள் சிவந்து கண்ணீர் வந்ததை மறைத்து சிரித்தேன்.இப்படி ஒரு பெண்குழந்தையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி

 

கடைவீதியில், மீண்டும் ஒரு மேஜிக் உண்டியல் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம் நானும் கடவுளின் பரிசான என்மகள் ஆர்த்தியும்…

Read Previous

கோழி வந்ததா..?? முட்டை வந்ததா..?? கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!!

Read Next

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தினகரன் வலியுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular