
உன் கண்ணீர்த் துளிகளைத்துடைத்தெறிய வேண்டுமென நினைக்கும் போது நான்
வளர்ந்திருக்கவில்லை….
நீ தூக்கிக்கொண்டால் மட்டுமே எட்டும்
உன் விழிகளின் கண்ணீர்துளிகளை
துடைக்க அவ்வளவு பிரியப்பட்டிருக்கிறேன்….
என்னை மழலைதானேயென்று தனிமை தேடி அமர்ந்தழும்போதெல்லாம் துணை அமர்த்திக்கொள்பவளின் அத்தனை
கண்ணீர்த் துளிகளும் சாட்சிக்காரியாய்
வளர்ந்தேன்…..
அவள் அழக்கூடாதென்ற எதிர்பாப்புக்கள்
பொய்த்துப்போன நாட்களில் எல்லாம்
என் பொம்மையும் ஊமையாயே
மௌனித்துக்கிடக்கும்…..
அவள் சிரிக்க என்னவும் செய்யலாமெனத்தோன்றியது இந்த உலகம்
அவளை சபித்துக்கொண்டே இருந்தது
இந்த உலகினால் அவள் நசுக்கப்பட்டுக்கொண்டே இருந்தாள்….. எனக்குமட்டும் உலகமாக இருந்த
அவளுக்காக இந்த உலகை நிராகரிக்க பழகிக்கொண்டேன்…..
ஆனாலும் போகப்போக என்னெதிரில் மட்டுமே சிரிக்கக்கற்றுக்கொண்டவளை இந்த
உலகின் முன்னால் ஒருதடவைகூட
புன்னகையோடு வாழ வைக்க முடியாமலே
யாவும் முடிந்து போனது….