இளமை ஊசலாடினால் என்ன நம் காதல் ஊஞ்சலாடிக் கொண்டுதானே இருக்கிறது..!!

முதல்முறையாக..

வெள்ளை முடி பூத்தபோது

நீ பறிக்க வந்தாய்.

அனுபவம் அடிக்கல் நாட்டுகிறது

நம் காதல் கோட்டையின் பலத்தை

இந்த வெள்ளை முடிகள்தான்

தாங்கி நிற்கபோகிறது

பறிக்காதே என்றேன்.

அன்றிலிருந்து அதையும் நீ

காதலோடே..

பார்க்க தொடங்கினாய்.

கருப்பு முழுவதும்

நம் பொறுப்புகளின்

அடையாளமாக

இருந்ததோ என்னவோ

ஒவ்வொன்றாய்

விடுவித்துக்கொண்டு

நமக்கான நேரத்தை

காலம் நிறைத்தது.

நம் இடைவெளியை குறைத்தது.

முன்பு

காலையில் சென்று

மாலையில் வருவேன்.

காத்திருக்கும் காதல்..

கண்டதும் ஒட்டிக்கொள்ளும்.

இப்போது

கூடவே இருந்துகொண்டு

நம் இருமலுக்கும் தும்மலுக்கும்

காரணத்தை தேடுவதலிருந்து

இரண்டு தம்ளர் அன்பை

நன்றாக சுண்டவிட்டு

ஒரு தம்ளர் அக்கறையான பிறகு

நாம் சேர்ந்து

இன்னும் வாழவேண்டுமென்ற

ஆசையோடு

பருக சொல்லும்

கசாயமானது..காதல்.

கோபம் தாபம் ஊடல் கூடல்

என நவரசங்களையும்

காட்டிய காதல்

இப்போது அத்தனையும் கிண்டி

லேகியமாக

நம்மை விழுங்குகிறது.

முதுமையின் வெள்ளோட்டம்

நம் காதலை

கொஞ்சம்கூட

தள்ளாட்டத்திற்கு

அழைக்கவில்லை என்பதை

உன் உதடுகளின் அழுத்தத்தில்

இப்போதும் உணர்கிறேன்.

மல்லிகையின் வாசத்தில்

மயங்கிய மனம்

உன்னிடம் தேடியதை

இப்போது தைலத்தின் வாசத்தில்

தொலைக்கிறேன்.

சூடாக குடித்த தேனீரை

ஆறவைத்து கொடுக்கிறாய்.

சில்லென்ற நீரை

சுடவைத்து தருகிறாய்.

மனைவியாக இருந்த நீ

எனக்கு தாயானாய்

கணவனாக இருந்த நான்

உனக்கு தந்தையானேன்

இதை கண்டு

கொஞ்சமும் குழம்பாமல்

நம்மை வளர்த்த காதல்

குழந்தையாகி போனது.

இப்போது சொல் செல்லமா

இளமை ஊசலாடினால் என்ன

நம் காதல்

ஊஞ்சலாடிக் கொண்டுதானே இருக்கிறது.

💗💗💗💗💗💗💗

Read Previous

சளி புடித்தாள் இதே போல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள்.. ஒரே நாளில் காணாம போய்டும் சளி..!!

Read Next

ஒரு அப்பாவும் நான்கு வயது மகனுக்கும் இடையே உள்ள கண்ணீர் சிந்தும் உரையாடல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular