இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்தியால் ஏற்பட்ட தகராறு: 16 வயது சிறுமி சுட்டுக்கொலை – காதலன் உட்பட 3 பேர் கைது..!!

 

பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவுக்குட்பட்ட கொடிஹள்ளி காவல் எல்லையில் உள்ள கெம்பலநாதா கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு வாரத்துக்குப் பிறகு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமூக வலைதளம் மூலம் அறிமுகமான சிறுமியும், அவருடன் பழகி வந்த மைனர் சிறுவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இருவரும் தனியாக ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 10-ம் தேதி சிறுமி இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு சிறுவனுடன் குறுஞ்செய்தி பரிமாறிக் கொண்டிருப்பதை அவரது காதலன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவன், சிறுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர், தனது தாத்தாவின் பழைய கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தி சிறுமியை சுட்டுக் கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், இந்த சம்பவத்தை மறைக்க, தனது 19 வயது அண்ணன் புட்டமாதா மற்றும் 40 வயது மாமா ஹரிஷ் ஆகியோரின் உதவியுடன், விவசாய நிலத்தில் சிறுமியின் உடலை புதைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மகளைக் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஹரிஷ் இந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் ரகசியமாக கூறிய தகவல் கிராமத்தில் பரவி, போலீசாரின் கவனத்துக்கு சென்றது.

இதையடுத்து கொடிஹள்ளி போலீசார் மைனர் சிறுவன் உட்பட 3 பேரையும் கைது செய்து, கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியின் உடல் வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சிறுமி தனது பெற்றோரிடம் தோழியின் வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாகவும், மகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதில் பெற்றோரின் கவனக்குறைவும் இந்த துயர சம்பவத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

அமைதியும் பொறுமையும் தரும் வாழ்க்கைப் பயணம் – சிந்தனை வரிகள்..!!

Read Next

குழந்தையின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என காலிங் பெல் அடிக்காத டெலிவரி ஊழியர் – குவியும் பாராட்டுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular