ஒரு அறுபதை தாண்டியிருப்பான்
காலை விடியல் வெகுசீக்கிரமே இருந்தது
கொஞ்சம் கையை ஊன்றி எழுந்திருந்து
மேசை இருந்த செம்பில்தண்ணீரை பருகிவிட்டு
கண்ணாடி முன் நின்று முகத்தை பார்த்தான்
தலைநரை தனக்கான இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தது.
முகத்தில் பல சுருக்கங்களும் போட்டிக்கு வந்திருந்தது.
அருகில் சேரில் அமர்ந்துகொண்டு
டிவியை ஆன் செய்துவிட்டு
மெல்லிய சத்தத்தோடு காலை செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தான்.
சிலவருடங்களுக்கு முன்பு காலை வேலை தெருவோர டீக்கடையில்
நண்பர்களுடன் அரட்டையில் தொடங்கி அரசியல் வரை முடிந்து
வேகமாக வீட்டிற்கு வந்து குளியல்
அவசரஅவசரமாக காலை உணவு வாயில்போட்டு கொண்டு
வேலைக்கு ஓடிய நாட்கள் நினைவில் அசைபோட்டது.
முன்பைபோல் இவனின் நண்பர்களின் எண்ணிக்கை இல்லை
ஒன்றோ இரண்டோ எப்போதாவது ஒருநாள் அழைப்பு ஒளிக்கும் கைப்பேசியில்…
அதுவும் ஒரு சில நொடிகளில் முடிந்துவிடும்…
அவர்களுக்கும் பல பிரச்சனைகள்
வீட்டிலேயே முடங்க தொடங்கும் காலம் அது…
சுகர் மரியாதைக்குரிய நோயாகிபோனது.
இளமையும் அழகும் உடல்நலனும் இப்போது அவனிடம்
சொற்பமே…
இவை மிகுதியாக இருந்த காலங்களை மறக்கமுடியாது
வாழ்ந்த நாட்களை அசைபோட்டுகொண்டே காலை செய்தி முடிந்து
காலைகடனுக்கு அழைத்து சென்று, குளியலோடு முடிந்து
பூஜை அறையில் விபூதி நெற்றியில்!
டீ குடிக்கிறீங்களா
அவளின் குரல்
ஆன் போடுமா…
டீ வந்தது
பழசோறு இருக்கு அத நா சாப்டுக்கறன்
உங்களுக்கு பக்கத்துல அந்தக்கா கடைல நாலு இட்லி வாங்கினு வரன்
சாப்ட்டு மாத்ரய போடுங்க…
சரிமா
இவனின் இளமை காலங்களில்
எல்லாம் இருந்தன
எல்லாமும் இவனுடையதாக இருந்தது
ஆட்டம் பாட்டம் என இருந்த காலத்தில்
இந்த வாழ்கையின் அத்துனை இன்பத்தையும் கண்டான்.
திருமணம் ஆன பிறகும் ஆண், குடும்பத்தலைவன்,
என்கிற பதவியோடு
அரசனாகவே இருந்தான்
அதிகார பலமும் வீட்டில்…
ஆனால் இன்று உணர்கிறான்
தான் அரசனாக இருந்ததற்கு காரணம்
தனக்காக வாழ்ந்த இவள் செய்த தியாகங்கள் தான்காரணம் என
பல முறை குரல் உயர்த்திய போது
பணிந்து சென்றாள்
அப்போதெல்லாம்
ஆண் என கர்வம்கொண்டான்
அது பிடித்திருந்து
அந்த அதிகார போதை அவனை பிடித்தாட்டியது.
நிறைய கட்டளைகள் பிறப்பித்தான்.
அத்துனையும் அவள் ஏற்றுகொண்டாள்
இன்று எல்லாம் போனது
இருப்பது அவள் மட்டுமே…
நிரந்தரம் எதுவென தெரியாமல் ஆடிய நாட்களை நினைத்து
கண்கலங்குகிறான்
இப்போதும் அக்கண்ணீரை துடைப்பதற்கு அவள் விரல்களே முதலில் வருகிறது.
கணவன் மனைவி என்கிற உறவு
அது வெறும் உறவுமட்டுமல்ல
இரு உயிர்களின் பிணைப்பு
ஒன்றுக்கு வலித்தால்
இன்னொன்று துடிக்கும்
இருக்கும்போதே கொண்டாடி தீர்த்துவிடுங்கள்
அவள் இல்லையெனில் நாம் அனாதையே….




