Oplus_131072
கல்லீரலை பாதுகாக்கும் காவலன்…
அது ஒரு குட்டித் தாவரம்! அந்தக் குட்டி தாவரத்திலும் நிறைய குட்டிக்குட்டிக் காய்கள் அடைக்கலம் கொண்டிருக்கும். அதன் பெயர் கீழாநெல்லி! ஈரப்பதம் நிறைந்த இடங்களில் தானாக முளைத்துப் பயன்தரும் தாவரம், கீழாநெல்லி. காய்ந்த விதைகள் வெடித்துச் சிதறி, நிறைய செடிகளாக வளர்கின்றன.
`மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது…’ எனும் பழமொழிக்கு ஏற்ப, கீழாநெல்லி தாவரம் சிறியதாக இருந்தாலும், அது கொடுக்கும் மருத்துவப் பலன்களோ மிக அதிகம். கீழாநெல்லியின் அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.
கீழ்வாய்நெல்லி, கீழ்க்காய்நெல்லி போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இலைகளுக்கு கீழ்ப்புறமாக நெல்லி வடிவில் சிறு அளவிலான காய்கள் இருப்பதால் `கீழா’ நெல்லி என்று பெயர் பெற்றிருக்கிறது. `செங்கீழாநெல்லி’ எனும் வகை, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் சிறந்த மூலிகை!
மஞ்சள்காமாலை எனும் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது… மஞ்சள் நிற கண்கள் நினைவுக்கு வரலாம்… மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர் ஞாபகத்துக்கு வரலாம்… அப்படித்தானே? ஆனால், மஞ்சள் காமாலை எனும் பெயரைக் கேட்டவுடன், ஒரு மருத்துவனாக எனக்கு நினைவுக்கு வருவது அதைக் குணப்படுத்த உதவும் கீழாநெல்லி தான்! காமாலை நோயைக் குணப்படுத்த பன்னெடுங்காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பான மூலிகை கீழாநெல்லி.




