மீன் உணவுகளில் சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் பெயர் பெற்றது விரால் மீன். இதில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக மசாலாவை அரைத்து மண் சட்டியில் செய்யும் கிராமத்து ஸ்டைல் விரால் மீன் குழம்பு, மணத்திலும் சுவையிலும் தனி இடத்தைப் பெறும்.
இந்த சுவையான விரால் மீன் குழம்பை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- விரால் மீன் – ½ கிலோ
- சின்ன வெங்காயம் – 20
- தக்காளி – 2
- துருவிய தேங்காய் – ¼ கப்
- புளி – நெல்லிக்காய் அளவு
- பூண்டு – 10 பல்
- மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்
- மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – ½ டீஸ்பூன்
- வறுத்து பொடித்த வெந்தயம் – 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் விரால் மீனை நன்றாக சுத்தம் செய்து, சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கழுவி தனியாக வைத்துக்கொள்ளவும்.
புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் கெட்டியாக கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காயை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து பேஸ்டாக தயாரிக்கவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதன்பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பின்னர் புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
மீன் வெந்த பிறகு அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் மட்டும் கொதிக்க விடவும். இறுதியாக வறுத்து பொடித்த வெந்தயப் பொடியை தூவி, நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து இறக்கினால் மணம் கமழும் கிராமத்து ஸ்டைல் விரால் மீன் குழம்பு தயார்.
சூடான சாதத்துடன் இந்த குழம்பை பரிமாறினால், சுவை இரட்டிப்பாக இருக்கும்.




