ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள வர்ஷா என்ற பெண் தொடர்பான பல்வேறு தகவல்கள் காவல்துறை விசாரணையில் வெளியாகி வருகின்றன.
மோசடி மற்றும் நில ஆக்கிரமிப்பு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள வர்ஷா மீது, அவரது கணவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். காவல்துறை விசாரணையில், வர்ஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பல காவல் நிலையங்களில் சுமார் 13 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
குருகிராமில் ஆய்வகம் நடத்தி வரும் சச்சின் சிங் ராஜ்புத் அளித்த புகாரில், வர்ஷா தனது ஆய்வகத்தில் வரவேற்பாளராக பணியாற்றியதாக தெரிவித்துள்ளார். பண பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் காரணமாக அவரை பணியில் இருந்து நீக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட விரோதத்தில் வர்ஷா தன்னை சிக்கவைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது அடையாள ஆவணங்களை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் தன்னுக்கு எதிராக கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தான் 62 நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கவும், புகாரை திரும்பப் பெறவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், தனது ஆய்வகத்தின் உரிமையை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் சச்சின் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். சமூக அவமானம் மற்றும் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறை விசாரணையில் சச்சின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல், வர்ஷாவின் மூன்றாவது கணவரான சந்தீப்பும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குருகிராமில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சந்தீப், வர்ஷா தனது நிறுவனத்தில் 2023-ம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், பின்னர் தனக்கு தெரியாமல் தனது முந்தைய திருமண விவரங்களை மறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் சந்தீப் குற்றம்சாட்டியுள்ளார். 2023 ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் பல்வேறு உண்மைகள் தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதவிர, வர்ஷா பல இளைஞர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




