பாகற்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவைதான். இதனால் சிலர் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால், உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள பாகற்காய், குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் பாகற்காய் உதவக்கூடும். பொதுவாக பாகற்காயை பொரியலாக மட்டுமே செய்து சாப்பிடும் நிலையில், அதன் கசப்பு அதிகம் தெரியாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாடு முறையில் சுவையான பாகற்காய் சாம்பார் செய்து பார்க்கலாம்.
மசாலா பொருட்களின் மணத்துடன் தயாரிக்கப்படும் இந்த பாகற்காய் சாம்பார், பாகற்காய் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் அளவுக்கு சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய பாகற்காய் – 1 கப்
- துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
- அரிசி மாவு – 2 ஸ்பூன்
- சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- வெல்லம் – 1 ஸ்பூன்
- புளிக்கரைசல் – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
- கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
- மல்லி விதை – 2 ஸ்பூன்
- வர மிளகாய் – 2
- துருவிய தேங்காய் – 1 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்:
- கடுகு – 1 ஸ்பூன்
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை தனித்தனியாக நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரைக்க தேவையான கடலைப்பருப்பு, மல்லி விதை, வர மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். பொருட்கள் நன்றாக வறுபட்டதும் ஆற வைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து கட்டிகள் இல்லாமல் கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து பாகற்காய் துண்டுகளை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை வேகவைத்து, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை நீங்கியதும் வேகவைத்த பாகற்காயை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும். கலவை நன்றாக கொதித்ததும் அரைத்த மசாலா விழுது, அரிசி மாவு கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.
சாம்பார் தேவையான பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இறுதியாக ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதை சாம்பாரில் சேர்க்கவும். மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் மணமிக்க செட்டிநாடு பாணி பாகற்காய் சாம்பார் தயார்.
இந்த சுவையான பாகற்காய் சாம்பாரை சூடான சாதத்துடன் பரிமாறலாம்.




