விஜயமங்கலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலம் வைசாலியை சேர்ந்த மம்துன் மன்ஜி (வயது 47) என்பதும், கோவையில் கட்டிட தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பரவுனி-கோவை ரெயிலில் கோவைக்கு வரும்போது விஜயமங்கலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




