ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பழமையான பாரம்பரிய மாளிகையில் புதுப்பிப்பு பணிகளின் போது தங்கக் கலசங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் புதையலாகக் கிடைத்ததாகக் கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரின் திரிபோலியா பஜார் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான மாளிகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, பூமிக்கடியில் இருந்து பழங்காலப் புதையல் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புகாரின்படி, அந்தப் புதையலில் சுமார் 15 தங்கக் கலசங்களும், 45 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்காமல், ஒப்பந்ததாரர் நள்ளிரவில் அவற்றை ரகசியமாக வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் வீடியோ ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும், புதையல் உண்மையில் கிடைத்ததா, அதன் மதிப்பு என்ன, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமா என்பது குறித்து காவல்துறையின் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.




