புதுடெல்லி: டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் (GTB) அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட விபத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்த தகவலின்படி, டெல்லியைச் சேர்ந்த 42 வயதான முகமது அக்பர் என்பவர் கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 18ஆம் தேதி GTB மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவர் சிகிச்சை பெற்று வந்த படுக்கைக்கு மேலே இருந்த கூரை மின்விசிறி திடீரென கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நோயாளி முகமது அக்பர் பலத்த காயமடைந்ததுடன், அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவப் பணியாளர் ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், சிகிச்சை பலனின்றி நோயாளி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு, கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் நிர்வாக அலட்சியம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View this post on Instagram




