தண்டவாளத்தில் சடலமாக கிடந்த குழந்தை..!! 6 பேர் அதிரடி கைது – விசாரணையில் அதிர்ச்சி..!!

இருகூர் அருகே தண்டவாளத்தில் ஒன்றரை மாத ஆண் குழந்தை சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அடுத்த இருகூர் ராவுத்தர் தரைபாலம் அருகே உள்ள தண்டவாளத்தில், கடந்த 13 ஆம் தேதி ஒன்றரை மாதமான ஆண் குழந்தை சடலமாக கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், குழந்தையின் உடல் அருகே வெட்டப்பட்ட கோழி, மஞ்சள், எலுமிச்சை பழம், ஆகியவை கிடந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வந்தனர்.

தொடர்ந்து சென்னை இருப்புப் பாதை இயக்குநர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், காவல்துறை தலைவர் பாபு மேற்பார்வையில், எஸ்.பி ஈஸ்வரன் நேரடி கண்காணிப்பில், கோவை இருப்புப்பாதை காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், சென்னை ரயில்வே சைபர் கிரைம் காவல்துறையினருடன் இணைந்து, பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: மின் தடையால் ஆள் மாற்றி கொலை! 6 பேர் போலீசில் சரண்!
இதில், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மரியா லூயிஸ் – ராதாமணி தம்பதி, பிரவீன் குமார் – கிருத்திகா தம்பதி மற்றும் நீலிகோணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த அக்சய், அவரது மனைவி வைஷாலி ஆகிய 6 பேரையும் அழைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணையில், மரியா லூயிஸ் – ராதாமணி தம்பதியருக்கு திருமணம் முடிந்து 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், வைஷாலியின் தங்கை மூலம், மகாராஷ்டிரா மாநிலம் சென்று அங்கு ஒரு தம்பதியரிடம் குழந்தையைப் பெற்றுக்கொண்டு கடந்த 13 ஆம் தேதி கோவை வந்துள்ளனர். ஆனால், அன்றே குழந்தை உடல் நலம் சரியில்லாமல் இறந்துள்ளது.

இதனால், குழந்தையின் உடலை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீச முடிவு செய்து, 6 பேரும் இருகூர் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் உடலை வீசியுள்ளனர். மேலும், குழந்தை இறந்தது சனிக்கிழமை என்பதால், சம்பிரதாயப்படி கருப்பு கோழி அறுத்து, மஞ்சள் பொடி தூவி சென்றுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, குழந்தை தத்தெடுக்கும் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் குழந்தை சட்டத்திற்கு புறம்பாக வாங்கியது, இறந்த குழந்தையின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் தண்டவாளத்தில் வீசியது, குழந்தையின் இறப்பை சட்டத்திற்கு புறமாக மறைத்தது உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தாய் மீதே போலீஸில் புகார் கொடுத்த 11 வயது சிறுவன்..!! என்ன காரணம் தெரியுமா?..

Read Next

மத்திய அரசின் HSCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular