ஒரு துறவியின் குடிலுக்கு அருகே சிறிய கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அப்போது அந்த வயதான துறவி, “தீய பழக்கங்களை ஆரம்பத்திலேயே விட்டுவிட வேண்டும். ஒருமுறை பழக்கமாகிவிட்டால், அதை விடுவது மிகவும் கடினம்” என்று அறிவுரை கூறினார்.
அப்போது கதிர்வேலன் என்ற ஒருவர், “நான் மன உறுதி கொண்டவன். எவ்வளவு காலம் பழகியிருந்தாலும், என்னால் எந்தத் தீய பழக்கத்தையும் விட்டுவிட முடியும்” என்று நம்பிக்கையுடன் கூறினான்.
“அப்படியா?” என்று புன்னகைத்த துறவி, அங்கிருந்த அனைவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றார். அங்கு பல்வேறு உயரங்களில் புளியங்கன்றுகள் வளர்ந்திருந்தன.
முதலில் ஒரு சிறிய புளியங்கன்றைக் காட்டி, “இது முளைத்து ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. இதைப் பிடுங்கு” என்றார். கதிர்வேலன் எளிதாக அந்தக் கன்றைப் பிடுங்கினான்.
பின்னர் ஆறு மாதம் வளர்ந்திருந்த மற்றொரு புளியங்கன்றைக் காட்டி, “இதையும் பிடுங்கிப் பார்” என்றார். கதிர்வேலன் சற்று சிரமப்பட்டாலும், முயற்சி செய்து அந்தக் கன்றையும் பிடுங்கிவிட்டான்.
அதன்பின் நன்றாக வளர்ந்திருந்த ஒரு புளிய மரத்தைக் காட்டிய துறவி, “இது ஓராண்டு வளர்ந்த கன்று. இதைப் பிடுங்கிப் பார்” என்றார்.
கதிர்வேலன் பலமாக முயற்சி செய்தும் அந்த மரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. இறுதியில் தோல்வியடைந்து நின்றான்.
அப்போது துறவி, “தீய பழக்கமும் இந்தப் புளியங்கன்றைப் போன்றதுதான். ஆரம்பத்தில் இருக்கும்போதே அதை எளிதாக அகற்றிவிடலாம். ஆனால் அது மனதில் வேரூன்றி வளர்ந்துவிட்டால், அதை விடுவது மிகவும் கடினமாகிவிடும்” என்று விளக்கினார்.
துறவியின் வார்த்தைகளை உணர்ந்த கதிர்வேலன், “ஐயா, தீய பழக்கங்களுக்கு அடிமையான பிறகு அவற்றை விடுவது எவ்வளவு கடினம் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்றான்.
அங்கிருந்த அனைவரும் அந்த உண்மையை உணர்ந்தனர். பின்னர் துறவி பிடுங்கி எறியப்பட்ட புளியங்கன்றுகளை மீண்டும் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றினார்.
நீதி:
தீய பழக்கம் சிறியதாக இருக்கும்போதே அதைத் தவிர்க்க வேண்டும். வளர்ந்த பிறகு அதை அகற்றுவது மிகவும் கடினம்.




