வெளிநாடுகளுக்கு படிக்க… பிள்ளைகளை தனியாக அனுப்பும் பெற்றோர்களின் கவனத்திற்கு..!!
ப்ரைவசி – தனிமனித சுதந்திரம்னு சொல்லலாமா..?? தனிமை விரும்புபவர்கள்னு சொல்லலாமா?? எது ப்ரைவசி? இதைப்பற்றி பேசுறதுக்கு முன்னாடி ஒரு சம்பவத்தை சொல்லணும்.
ஒரு திருமணத்தின் மூலமாக வந்த மிக தூரத்து சொந்தம்… நாங்கள் இருக்கும் ஊரில் one of the famous university Gerogia Techல M.S பண்ண… அவன் பெற்றோர்களோ துபாயில்..! இது தெரிந்ததும் … ‘நமக்குத்தான் கையும், வாயும் சும்மா இருக்காதே…” ஸோ “நீ அந்தப் பையனோட நம்பர் கொடு, நாங்க பேசிட்டு, ஒரு நாள் வீட்டுக்கு வரட்டும்”னு சொல்ல..
“இல்லே அவன் கேம்பஸ் உள்ளேயே தங்கியிருக்கான். கார் இல்லை. வெளியில வரமுடியாது”ன்னு அந்த புதுப்பெண் (அவளின் சித்திப்பையன் தான் கதையின் நாயகன்) சொல்ல
“அப்படியா.. சரி அப்போ நாங்களே போய் கூட்டிக்கிட்டு வரோம்”னு சொல்ல
சரின்னு நம்பர் கிடைக்க… போன் செய்தால் … அவன் எடுக்கவே இல்லை. இதோட விட்டிருக்கலாம். சனியன் எங்க மனசுலயும், வாயிலயும் பட்டா போட்டு உட்கார்ந்துட்டான் போல.. விடாம போன் பண்ண…
எங்களுக்கு என்னன்னா…. “பாவம் சின்னப்பையன். வீட்டை விட்டு வந்து தனியா இருக்கான், வந்தா, ஒருநாள் வீட்டு சாப்பாடு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. நம்மக்கூட பேசிட்டு போன மாதிரியும் ஆச்சு. வாரத்துல ரெண்டு நாள் லீவுக்கும் இப்படியே வரட்டும். எனக்கு ஒரு தம்பி இருந்தா, செய்ய மாட்டேனா”னு நினைப்பு.
எப்படியோ ஒருநாள் மனசு வந்து போனை எடுத்து பேசினான். அந்த வார இறுதியில் போய் அழைத்து வர பிளான். விருந்து தடபுடலாக சமைத்து … ஆசையாக காத்திருக்கேன்.
என் கணவர் சென்று அழைத்து வர… பையன் செம அமைதி. நானும் என் கணவரும் விடாமல் பேசுவோம். வாயே மூடாது. “ப்ளீஸ் நூறு ரூபாய் தரேன்.வாயை கொஞ்ச நேரம் மூடுங்க”ன்னு கெஞ்சினாலும். “காசா முக்கியம்”னு ஒதுக்கிட்டு பேசுற ஆளுங்க.
ஆனால் அந்தப் பையனோ… நீ கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு வார்த்தை தான். அதைத்தாண்டி ஒரு எழுத்து கூட பேச மாட்டேன்னு சொல்லுற டைப் போல. அங்கேயே பெரிய பல்ப். மூக்குல கொஞ்சம் கட் ஆகி …
சரி பேசலைன்னா பரவாயில்லை. நல்லா சாப்பிடட்டும்னு நினைச்சா… “நான் ரொம்ப சாப்பிட மாட்டேன்.”அப்படின்னு இத்துணூண்டு. எங்களுக்கு பேசுறதுக்கும், சாப்பிடறதுக்கும் வாய் ரொம்ப நீளம்… அவன் அப்படியே உல்ட்டா…. சின்னப்பிள்ளைக கூட இன்னும் கொஞ்சம் நிறைய சாப்பிடும். இங்கே இன்னொரு பல்ப்…. மூக்கும் இன்னும் கொஞ்சம் கட்…
எனக்கு பேசலைன்னா தலை வெடிச்சுடும். அவன் பேசினா வெடிச்சுடும்ன்ற மாதிரியே அமைதியா இருக்கான். ஷ்ஷப்பா முடியலை. எவ்வளவு நேரம் தான் … மூணு பேரும் டிவியை வெறிக்க வெறிக்க பார்க்குறது. கண்ணு பூத்து… ஒழுங்கா சாப்பிடாம.. பேசாமல் தலைவலி வேறு.
ஆசையா அவன் எப்போடா வருவான்னு காத்திருந்தது போய்… எப்படா கிளம்புவான்னு ஆச்சு. அவனே ஒருவழியா “நான் கிளம்புறேன்”ன்னு சொல்ல
“சரி, கிளம்புறானே, டீ இல்லே காஃபி போடுவோம், எது பிடிக்கும்னு கேட்டா, நான் எதுவுமே குடிக்க மாட்டேன்னு பதில்.. ஓகே.. நான் நிறைய சமைச்சு இருக்கேன். இட்லி மாவு இருக்கு. எல்லாம் pack பண்ணித்தரேன் .. இரண்டு நாளைக்கு வரும்.”னு சொல்ல (இங்கு தனியாக இருப்பவர்கள், இப்படித்தான் pack பண்ணி எடுத்துப்பாங்க)
“அதெல்லாம் வேணாம். I can manage. I don’t like indian food’ ன்னு அடுத்த பல்ப். நோஸ் கட் கொஞ்சம் பலமா….
சரி ஓகே… நெக்ஸ்ட் வீக் பார்ப்போம். உனக்கு எப்போ ஓகேன்னு சொல்லு, நான் கூப்பிட வரேன்”ன்னு சொல்ல
“நோ வேணாம். எனக்கு படிக்கிற வேலை இருக்கு. நான் வரலை..” பெரிய பல்ப்… நோஸ் மொத்தமும் கட்.
அப்பாடி இப்படி ஒரு பிள்ளையை நான் பார்த்தது இல்லைடா சாமி…
அவங்க பேரண்ட்ஸ் பேசினாங்க. நல்லா பேசினானா.. நல்லா சாப்பிட்டானா… அடுத்த வாரம் வரேன்னு சொன்னானா… இப்படி ஏகப்பட்ட னா னா னா க்கள்…. எல்லாத்துக்கும் நோ சொல்ல.. அவங்க அப்செட்.
“அவன் ரொம்ப ப்ரைவஸி எதிர்பார்ப்பான். இங்கே துபாயில இருந்தப்பவே, சின்னதுல இருந்தே அப்படித்தான். எங்கக்கிட்டே, அவன் தம்பிக்கிட்டேயே ரொம்ப பேச மாட்டான். தனியா ரூம்ல தான் இருப்பான். புக்ஸ் மட்டும் தான் அவனுக்கு…. இப்படியே இருக்கானேன்னு தான் … உங்களை பார்க்க சொன்னேன். அவன் மாறவே மாட்டான் போல”ன்னு ஒரே புலம்பல்..
தெரியாம தான் கேட்குறேன்…. இந்த ப்ரைவசின்னா என்ன? இப்படி மற்ற மனிதர்களோடு ஒட்டாமல்… உறவுகளின் அருமை தெரியாமல்.. தான்… தன் உலகம்னு தனித்திருப்பதா…??
ஆன்னாஊன்னா என் ப்ரைவசியே போச்சு. எனக்கு ப்ரைவசியே இல்லைன்னு சொல்லுற பிள்ளைகள் அதிகம்! நான் பொத்தாம்பொதுவாக பேசவில்லை. பார்த்ததை வைத்து சொல்றேன். இதற்கு சில விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்க்கும் இந்த ப்ரைவசி … அவர்களை மட்டுமல்ல.. அவர்களை சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வார்களா…??
அந்த பையன் கதைக்கு வருவோம்.
எங்கள் வீட்டிற்கு வந்து சென்றபிறகு… ஒரு ஆறு மாதம் அமைதியாக கழிய… இதற்கிடையில் நாங்கள் நூறு முறை போன் செய்தால்.. ஒருமுறை தான் எடுத்து பேசுவான். சரி போடானு நாங்களும் விட்டுட்டோம்.
திடீர்னு ஒருநாள் அவனோட அம்மாக்கிட்டே இருந்து போன். எடுத்ததும் ஒரே அழுகை. பையனோட பேசி ஐந்து மாதம் ஆச்சு. போன் பண்ணினா எடுக்கவே மாட்டேங்குறான். Fb, whatsappலாம் ஆக்டிவா இருக்கான். ஆனா எங்களுக்கு respondஓ ரிப்ளையோ பண்ண மாட்டேங்குறான். என்னன்னு தெரியலை. பயமா இருக்குன்னு அழுகை.
சரி பயப்படாம இருங்க. நாங்க போய் பார்க்கிறோம்னு சொல்லிட்டு… நிறைய ஹாஸ்டல் பில்டிங்(dorm) இருக்கு, எந்த ஹாஸ்டல், ரூம் நம்பர் கேட்க… பெற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியலை. இத்தனைக்கும் இருவரும் well educated & working in Dubai.
அவங்க போன் பண்ணப்போ… மதியம் 3 மணி … univercity போக நாலு மணியாச்சு. என் கணவர் கிளம்பி ஓட.. அங்கே ஆபீஸ்ல கேட்க… பெயரை தவிர வேறு எதுவும் தெரியாது. எப்படியோ சொல்லி. Registerல செக் பண்ணி, அவனோட ஹாஸ்டல் பில்டிங், ரூம் நம்பர் கண்டுப்பிடிக்க…
அடுத்தது blood relation or guardian தவிர வேறு யாரையும் பார்க்க விட மாட்டாங்க. திரும்ப துபாய்க்கு போன் பண்ணி… பெற்றவர்களையே இங்கே பேச வைக்க…
“ஓகே, நாங்க key தரோம். ரூல்ஸ் படி தரக்கூடாது. ஆனா நீங்க இவ்வளவு பயப்படுறதால … ரூம் சாவி மட்டும் தான் தருவேன். பில்டிங் சாவி தர மாட்டேன். நீங்க அங்கே வெயிட் பண்ணி, வேற யாராவது உள்ளே போகும்போது ஹெல்ப் கேட்டு உள்ளே போய்க்கோங்க. But if anything happens, you have to take the responsibility” ன்னு கொடுக்க..
எனக்கு பயம்… அங்கே என்ன கண்டிஷனோ…. போதைபொருட்கள் சர்வசாதாரணமாக கிடைக்கும் இடம். கிரைம் ரேட் அதிகமுள்ள ஏரியா. மனசுல என்னன்னவோ கற்பனை…
கணவர் எனக்கு போன் செய்ய.. “உள்ளே போக வேணாம்”னு என் கணவரிடம் நான் சொல்ல..
அடுத்த ஆப்ஷன் போலீஸ் கம்ப்ளைன்ட். எங்களுக்கும் இதில் ரிஸ்க். வேறு வழியில்லை சரின்னு போலீஸுக்கு call பண்ணினோம். வந்தார்கள்… எங்களிடமே ஆயிரத்தெட்டு கேள்விகள்… கிட்டத்தட்ட எங்களை கார்னர் செய்யுற மாதிரி….
பிறகு அந்த பையனின் ரூமுக்கு போலீஸ் சென்று பார்க்க.. இங்கே இவ்வளவு அமளிதுமளி நடக்க. அவரோ அங்கே கூலாக… படித்துக் கொண்டிருக்கிறாராம்.
அவனிடம், “உன்னோட ரிலேஷன் வந்து வெளியே வெயிட் பண்ணுறார். வந்து பார்க்குறியான்னு கேட்க
இத்தனையும் நடக்கும்போது, நைட் 10 மணி.நாலு மணிக்கு போன மனுஷன், கிட்டத்தட்ட ஆறு மணி நேரமா அலைச்சல். மன உளைச்சல்..!
“நோ I’m busy’ ன்னு அவன் சொன்னானாம். வெளியில் வந்த போலீஸ்காரர் “he is ok, don’t worry. சில பசங்க இப்படித்தான். நாங்க இதுமாதிரி நிறைய பார்க்கிறோம். அவனோட parentsக்கு inform பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு… அவன்கிட்டே அவங்க அம்மாக்கிட்டே பேச சொல்லியிருக்கேன். பேசுவான்னு நம்புவோம்னு சொல்ல..
நெருங்கிய சொந்தமில்லை. பையனும் உங்கள் உறவை மதிக்கவில்லை. அவனுக்காக நீங்க இவ்வளவு தூரம் அலையுறது .. நான் உங்களை பாராட்டுறேன் , but இனிமேல் இப்படி இருக்காதீங்க. Sometimes ஏதாவது ஒண்ணுன்னா, உங்களுக்கே பிரச்சனையா முடியும்னு சொல்லிவிட்டு போயிட்டார்.
வீட்டுக்கு வரும்போது, நைட் 12. அத்தனை நேர அலைச்சலும், கஷ்டமும், மன உளைச்சலும்.. அந்த பையனை பார்த்திருந்தால் ஒன்றுமில்லாமல் போயிருக்கும். ஆனால் அவன் பார்க்கவே இல்லை. வெளியிலேயே வரவில்லை. அதைவிட கொடுமை… இது நடந்த பிறகும் , அவன் பெற்றோர்களுக்கு போன் செய்து பேசவில்லை. கேட்டால், படிக்கணும், “i don’t want to talk with them. I want my space. I need privacy” அப்படின்னு பதில்..!! என்ன சொல்ல!!!
சிறு வயதிலிருந்தே.. உறவுகளின் மேன்மையை சொல்லி வளர்க்காதது பெற்றோர்களின் தவறு தானே!!
அவனே ஒதுங்கி போனாலும்… அவனை அருகிலிருத்தி.. மனம் விட்டு பேசாதது யார் தவறு???
பிறந்ததிலிருந்து 21 வயது வரைக்கும் இப்படி வளர்த்துவிட்டு..அதிலும் அவன் அப்படித்தான்… தனிமை விரும்பின்னு பெருமை பேசிவிட்டு… இப்போது குறை சொல்வது நியாயமா??




