பெருமாளுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பது புரட்டாசி மாதம். நவக்கிரகங்களில் புதன் கிரகத்துடைய மாதமாக இருப்பது புரட்டாசி. புதன் கிரகத்தின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே தான் புதன் கிரகத்தின் அருளை பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைபிடித்து பூஜை செய்வது நல்லது. அவ்வாறு வழிபட முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது பெருமாளை பூஜை செய்து வழிபட்டால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார் அதன் காரணமாக சனியினால் ஏற்படும் கஷ்டங்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்கினால் நம்மை காத்தருள்வார் என்பது ஐதீகம்.
நாளை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசனம் செய்தால் சௌபாக்கியங்களையும் தந்தருள்வார். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடலாம். பெருமாளுக்கு துளசி மாலையும் தாயாருக்கு மல்லிகை பூ மாலை சாற்றி வழிபடலாம். இது தவிர விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மகத்தான பலன்களை வழங்கக் கூடியது ஆகும்.
கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து விட்டு வந்தவுடன் வீட்டில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபட வேண்டும். சிலர் தளிகையுடன் மாவிளக்கும் சேர்த்து படைப்பார்கள். பெருமாளுக்கு தளிகை இடும்போது பூஜை அறையில் பெருமாளின் படத்துக்கு துளசி மலர்கள் வைத்து அலங்கரித்தால் மிகவும் சிறப்பு. பெருமாளின் படத்திற்கு முன்பு சாமியை நோக்கி இருப்பது போன்று வாழை இலை போட்டு ஐந்து வகையான சாதங்கள் செய்து படைக்கலாம்.
சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகிய சாதங்களை இலையில் அப்படியே வைத்து வழிபடலாம். அல்லது சாதங்களை கொண்டு பெருமாள் உருவம் அமைத்தும் வழிபடலாம். இது தவிர துளசி தீர்த்தமும் பழ வகைகளும் சேர்த்து படைக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் உளுந்து வடை, சுண்டல், பானகம் வைத்து வழிபடலாம். மாவிளக்கு இட்டு படைக்கலாம். ஐந்து வகையான சாதம் செய்ய வழக்கம் இல்லாதவர்கள் வீட்டில் சாதாரணமாக செய்யும் சாம்பார் கூட்டு பொரியல் பாயாசம் ஆகியவற்ற இலையில் பரிமாறி அதை பெருமாளுக்கு படைத்து வழிபடலாம். ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்ற உயர்வான மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். இவ்வாறு செய்தால் பெருமாளின் பரிபூரணமான அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்.




