நம் அனைவரின் வீட்டிலும் இரவு சாப்பாடு மீதம் இருப்பது வழக்கம். அதனை கீழே கொட்டுவதற்கு பதிலாக இப்படி செய்து பாருங்கள்.
சாதம் ஏதேனும் மீந்து இருந்தால் அதை வைத்து கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி செய்யலாம். இது மிகுந்த சுவையுடன் பிரமாதமாக இருக்கும். இந்த அக்கி ரொட்டியை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் பிரமாதம்.
அக்கி ரொட்டி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானவை:
- மீந்து போன சாதம் – 1/2 கப்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப
- துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1-2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து கொண்டு மீந்து போன சாதத்தை அதில் போட்டு, நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். 1/2 டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு இவை அனைத்தையும் அதில் சேர்த்து கொள்ளவும்.
அதன் பிரகு துருவிய தேங்காய், அரிசி மாவு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகிய பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு வாழை இலை அல்லது கவரை எடுத்து, அதில் நல்லெண்ணெய் தடவி தட்டையாக தட்டி வைக்கவும்.
இறுதியாக அதை சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி தட்டி வைத்திருக்கும் ரொட்டியை கல்லில் போட்டு பொன்னிறமாகும் வரை வேக விட்டு இறக்க்கிவிடவும். அவளவுதான், சுவையான கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி தயார்.




