வங்கி கணக்கு, நிலையான வைப்பு நிதி (Fixed Deposit), மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட எந்தவொரு முதலீட்டையும் தொடங்கும்போதும், விண்ணப்பப் படிவத்தில் நாமினி (Nominee) பற்றிய விவரங்களை கேட்கும் பகுதி இருக்கும். ஆனால் பலர் இந்தப் பகுதியை நிரப்பாமல் விட்டுவிடுகின்றனர். இது எதிர்காலத்தில் குடும்பத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடியது.
நாமினி என்பவர் யார்?
நீங்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், உங்கள் வங்கி கணக்கு அல்லது முதலீட்டில் உள்ள தொகையைப் பெறுவதற்காக நீங்கள் முன்கூட்டியே நியமிக்கும் நபரே நாமினி.
பொதுவாக பெற்றோர், துணைவர், குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்களை நாமினியாக நியமிக்கலாம். சில முதலீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அப்படி பல நபர்களை நியமித்தால், ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய பங்கையும் குறிப்பிடலாம். பங்கு குறிப்பிடப்படவில்லை என்றால், தொகை சமமாகப் பிரிக்கப்படும்.
நாமினியை ஏன் நியமிக்க வேண்டும்?
ஒருவர் இறந்த பிறகு, அவரின் வங்கி கணக்கு மற்றும் முதலீடுகளில் உள்ள பணம் சட்ட வாரிசுகளுக்குச் செல்லும். ஆனால் அதை பெறுவதற்கான நடைமுறை பல நேரங்களில் சிக்கலானதாக இருக்கும்.
இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்கள் தேவைப்படலாம். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவும் தேவைப்படலாம். இதனால் பணத்தைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகும்.
ஆனால், கணக்கில் நாமினி பதிவு செய்யப்பட்டிருந்தால், தேவையான குறைந்தபட்ச ஆவணங்களின் அடிப்படையில் பணத்தைப் பெறும் நடைமுறை எளிதாகவும் விரைவாகவும் முடியும்.
வங்கி லாக்கருக்கும் நாமினி அவசியம்
வங்கி கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டுமல்லாமல், வங்கி லாக்கருக்கும் நாமினி தேவைப்படுகிறது.
லாக்கர் வைத்திருப்பவர் இறந்துவிட்டால், நாமினி இல்லாத சூழலில், லாக்கரில் உள்ள நகைகள் அல்லது பொருட்களைப் பெறுவதற்கு கூடுதல் சட்ட நடைமுறைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
குறிப்பாக பெண்கள் தங்களது நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது வழக்கம் என்பதால், குடும்பத்தின் அவசர சூழ்நிலைகளில் சிக்கல் ஏற்படாமல் இருக்க லாக்கருக்கும் நாமினியை பதிவு செய்வது முக்கியம்.
கோரப்படாத நிதியாக மாறும் பணம்
வங்கி கணக்குகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் பணம் கோரப்படாத நிதி (Unclaimed Deposit) எனக் கருதப்படுகிறது. உரிமையாளர் இறந்துவிட்டது, கணக்கு விவரங்கள் தெரியாமல் போனது அல்லது நாமினி விவரங்கள் பதிவு செய்யப்படாதது போன்ற காரணங்களால் பல கோடி ரூபாய் இவ்வாறு தேங்கிக் கிடக்கிறது.
இதனால், உங்கள் வங்கி கணக்குகளில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது அவசியம்.
குடும்பத்தின் நிதிப் பாதுகாப்புக்கு முக்கியம்
குடும்பத்தில் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் போது, அந்த இழப்புடன் சேர்த்து பணம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படக்கூடாது. குறிப்பாக குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய நாமினி விவரங்களை பதிவு செய்வது மிகவும் அவசியம்.
இன்றே உங்கள் வங்கி கணக்குகள், முதலீடுகள் மற்றும் லாக்கர் கணக்குகளில் நாமினி பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.




