அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
சிவசாகர், ஜோர்ஹாட் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் கடுமையாக பாதித்துள்ள நிலையில், 6.53 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன.
வெள்ளத்தின் தாக்கத்தால் 24,000 ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




