கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் அளித்ததற்காக மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் உண்மை பின்னணியை முழுமையாக விசாரித்து, கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் துயர்துடைப்புத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




