
தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இலவச பட்டா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படுவதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இதர மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கும் இலவச பட்டா வழங்கப்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மாநகராட்சி பகுதிகளில் 15 சென்ட்க்கு அதிகமாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 25 சென்ட்க்கு அதிகமாகவும் இருந்தால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.