கடந்த இரண்டு நாட்களாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நபர் மகா விஷ்ணு ஆவார். பரம்பொருள் என்னும் தொண்டு நிறுவனத்தை நிறுவிய இவர், தன்னை “கடவுளின் மறு அவதாரம்” என கூறி மக்களிடையே பிரசங்கித்து வந்தார். இந்நிலையில், இவர், சென்னை அசோக் நகரிலுள்ள அரசு பள்ளியில் தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் மாணவர்களிடம் மூட நம்பிக்கைகளை விதைக்கும் வகையில், “முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்களே இப்பிறவியில் மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளனர் ” என்ற இவரது பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இவர் ஆஸ்திரேலியா தப்பி ஓடியதாக செய்திகள் உலா வந்த நிலையில், இவர், வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் பேசியதற்கான விளக்கத்தை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் நேரில் சந்தித்து அளிப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில், தமிழகம் திரும்பிய இவரை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.