Oplus_131072
இன்று நமக்கு சமையல் என்பது ஒரு பெரிய விஷயமாகத் தெரிகிறது. காரணம் அமர்ந்து சாப்பிடுவதற்கு யாரும் விரும்புவதும் இல்லை, நேரமும் இருப்பது இல்லை. அப்படியே சாப்பிட நேரம் இருந்தாலும் வேலை, எடை குறைக்க வேண்டும் என்று ஏதோ ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு சாப்பிடாமல் செல்கிறோம். ஆனால் அன்று (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) ஐந்து நிலங்களாக மாத்திரமே இருந்த பொழுது மக்கள் சமையல், வேலை, தொழில் என்று வாழ்ந்திருந்திருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களாக மாத்திரமே இருந்தது. சங்க இலக்கிய மக்கள் தங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தனர். அவர்களும் தொழில், விவசாயம், வேலை என்றும் குடும்பம் என்றும் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் அன்று போட்டி, பொறாமை, பொய் இல்லாத மக்களாக இருந்தனர். தங்கள் நிலத்தில் இல்லாத பொருளை அடுத்த நிலத்திலிருந்து வாங்கியும், அவர்களுக்கு இல்லாத பொருளை (பண்டமாற்றுதல்) இவர்கள் கொடுத்தும் வாழ்ந்துள்ளார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் அவர்களுக்கு ஈடு யாரும் இல்லை. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை ஐவகை நில மக்களும் நமக்கு அன்றே எடுத்துக் காட்டி உள்ளனர். அவர்களைப் பற்றி விரிவாகப் பாப்போம்.
அவர்கள் உணர்வையும், அறிவையும் நன்றாகக் பயன்படுத்தி கிடைக்கும் பொருளை வைத்து பக்குவமாகவும் நன்றாகவும் சுவையோடும் சமைத்தனர். தாங்கள் சமைத்ததை பிறருக்குக் கொடுத்து வாழ்வது முக்கியம் என்பதைக் காட்டியுள்ளனர். அவர்கள் மரக்கறி உண்பதை விட புலால் உணவை விரும்பி சாப்பிட்டு உள்ளனர். மதுவை விரும்பி அருந்தி உள்ளனர். கனி உணவுகளும், அரிசி உணவையும், பிற உணவையும் விரும்பி சாப்பிட்டுள்ளனர். சங்க காலத் தமிழர்கள் காய், கிழங்கு, பருப்பு, கீரை ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளார். நண்டுக்கறியோடு பீர்கங்காயையும் சேர்த்து சமைத்துள்ளனர். பொதுவாக மரக்கறியோடு இறைச்சியை சமைத்து சாப்பிடும் வழக்கம் கிடையாது. மான் இறைச்சி, ஆட்டிறைச்சி உடும்பு இறைச்சி, பன்றி இறைச்சி, பறவை இறைச்சி ஆகிய இறைச்சிகளை உண்டதாக சங்க இலக்கியங்களில் தகவல் உள்ளது. அரிசி உணவை அதன் சுவைக் கெடாமல் இருப்பதற்காக கைக்குத்தல் அரிசியை சமைத்து சாப்பிட்டுள்ளார்கள். கொழுத்த மாமிசத் துண்டுகளை தீயில் சுட்டு அதனுடன் தினை சாதத்தை சாப்பிட்டு உள்ளனர்.
அரிசி, உளுத்தம் பருப்பு கலந்து பொங்கல் செய்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு இடைவெளி விடாமல் உண்ணக் கொடுப்பர். சிலர் நெய்யும் இறைச்சியையும் சேர்த்து வெள்ளைச் சோற்றைக் கொடுப்பார்கள். திருமணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு வெள்ளை நூலினால் வாகை இலைகளையும், அருகம்புல், கிழங்குகளையும் சேர்த்துக் கோத்த மாலையை திருமணப் பெண் போட்டுக் கொள்வார். மணமகளுக்கு தாலி கட்டியதாக எந்த சான்றும் கிடைக்கவில்லை. பெண்ணின் கற்ப்பை மதித்து வாழ்ந்தார்கள் சங்க கால தமிழர்கள். அவர்கள் புழுங்கல் அரிசிச்சோற்றையே தினமும் உண்டு இருக்கிறார்கள். புழுங்கல் அரிசியை உரலில் போட்டு அதை வெள்ளையாகத் தீட்டியே சமைத்தார்கள். வரகையும், சாமையையும் சமைத்து உண்டிருக்கிறார்கள். பல விதமான நெல் தமிழ்நாட்டில் விளைந்திருக்கிறது. காய்கறிகளுக்கு கடுகு தாளித்து சமைத்தார்கள். மாங்கனியை சாறு பிழிந்து அதை புளிக்க வைத்து அதைப் புளிக்கு பதிலாக உபயோகித்தார்கள். இது மட்டும் இல்லாமல் களாப் புளி, துடரிப் புளி நாவர்ப் பழப்புளியையும், உபயோகித்தார்கள். கொம்மட்டி மாதுளங்காயை நறுக்கி அதோடு மிளகுப் பொடியும் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பசு வெண்ணையில் பொரித்தும் சாப்பிட்டனர். வடு மாங்காய் ஊறுகாயும் சங்க காலத்திலேயே இருந்தது. பலாப்பழம், வாழைப்பழம், இளநீர், நுங்கு, சேம்பிலைக் கறி, வள்ளிக் கிழங்கு, சுட்டப் பனங்கிழங்கையும் சாப்பிட்டார்கள். சோற்றுக்கான அரிசி, முல்லைப்பூ போன்று வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஒரு அரிசிக் கூட அரைகுறையாக உடைந்திருக்காது, சோறு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பதமாக வெந்திருக்கும். பழைய சோற்றையும் சங்க கால மக்கள் உண்டிருக்கிறார்கள். அரிசி, கொள்ளுப் பருப்பு, பயற்றம் பருப்பு முதலியவற்றை பாலில் கஞ்சி காய்ச்சி குடிப்பார்கள். புளிக்க வைத்த மாவைக் கரைத்து புளிங்க்கூழ் செய்வார்கள். வேடர்கள் விரும்பி உண்ட சோறு புளிச்சோறு ஆகும். புளியங்காய், நெல்லிக்காயை ஊற வைத்த காடியை மிகவும் விரும்பி உண்டு வந்தனர். பாலைத் தோய்த்து வெண்ணை திரட்டும் வழக்கம் அந்தக் காலத்திலேயே இருந்தது. வெண்ணையை பதமாகக் காய்ச்சி நெய்யாக்கி அதை சோற்றில் வார்த்து சாப்பிடுவார்கள்.
இறைச்சியை பாலும் அரிசியும் சேர்த்தும் அல்லது தனியாகவும் சமைப்பார்கள். சங்க காலத்தில் ஊண் சோறு என்று கூறினார்கள். அதை நாம் இப்பொழுது பிரியாணி, புலவு , புலவு என்று கூறுகிறோம். நெல்லை இடித்து ஆண் பன்றிக்குத் தீனியாகக் கொடுத்து. அதை நன்றாக கொழுக்க வைப்பார்கள்; அதை பெண் பன்றியுடன் சேர விடாமல் தனியாகக் குழிக்குள் இட்டு வளர்த்து பிறகு அதனைக் கொன்று அதன் மாமிசத்தை சமைப்பார்கள். அந்நாளிலும் மாமிசத்தை உப்புக் கண்டம் போட்டு வைப்பார்கள். மாமிசத் துண்டுகளை இரும்பு கம்பிகளில் கோர்த்து அதை நெருப்பில் வாட்டியும் சாப்பிடுவார்கள். பல வகையான உணவுகளை சுவையான பொருள் சேர்த்து தின் பண்டங்கள் தயாரித்தனர். அப்பம், பண்ணியம், மோதகம், துவையல், மீன் குழம்பு, தயிர்க் குழம்பு போன்றவற்றை சாப்பிட்டுள்ளார். பண்ணியம் நெல் மாவில் இனிப்புச் சுவையான பொருட்களை சேர்த்து ஆக்கப்படும் ஒரு வகை சிற்றுண்டி தான் இந்தப் பண்ணியம் என்பது. வெல்லப் பாகையும் பாலையும் அளவாகக் கலந்து செய்தப் பண்ணியங்களையும் தின்றனர்.




