திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே விவசாயியின் தண்ணீர் தொட்டியில் கிடந்த ஆணின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டடம் அருகேயுள்ள தும்பலப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி, விவசாயி. இவரது தோட்டத்தில் மாடுகள் தண்ணீர் குடிக்கும் சிறிய தொட்டி உள்ளது. நேற்று முற்பகல் 11மணியளவில் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த யுவராஜ் தனது மாட்டுக்கு தண்ணீர் குடிக்க வைக்க வேலுசாமி தோட்டத்து தொட்டிக்கு கொண்டு சென்றார்.
அப்போது தண்ணீர் தொட்டிக்குள் ஆண் பிணம் கிடப்பதைக் கண்டு வேலுசாமிக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் கடந்த சில நாட்களாக மேட்டுக்கடை பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. பசி மயக்கத்தில் வழி தவறி சென்று தொட்டியில் விழுந்திருக்கலாம் என தெரிவித்தனர். இறந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.