இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையில் கலவரம் வெடித்தது. ஓர் ஆண்டு கடந்தும் இந்த மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது.
இந்த வன்முறையில் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் பரிதாபாய் உயிர் இழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். மேலும் வன்முறையால் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.