அடிபம்பும், மோகினி பிசாசும்..!! அந்த காலத்தை நினைவிற்கு கொண்டு வரும் கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

அடிபம்பும், மோகினி பிசாசும்….

என்ன நண்பர்களே தலைப்பை பார்த்ததும் குழப்பமாக இருக்கிறதா, அது ஒரு 30 வருடங்களுக்கு முந்தைய அந்த காலத்து கதை.

 

30 வருடங்களுக்கு முன்பு பகலில் எந்த நேரமும் பிசியாகவே இருக்கும் இந்த அடிபம்பு, மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டால் இந்த அடி பம்பு இருக்கும் பகுதியில் யாரும் வர மாட்டார்கள், குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப்புறங்களிலேயே அதிகம் இந்த அடி பம்புகள் காணப்படும்.

 

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது அந்த காலத்தில் உள்ள பெரியவர்கள் எங்களிடம் கூறுவது என்னவென்றால், இந்த அடி பம்பில் இரவு நேரங்களில் மோகினி பேய் வந்து தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள்.

 

மோகினி பேய் என்றால் திருமணம் ஆகாமல் இருந்து போன பெண்களை தான் மோகினி பேய் என்று சொல்வார்கள், மத்த பேயை விட இந்த மோகினி பேய் என்றால் ஊரே நடு நடு நடுங்கும்.

 

சில பெண்கள் கூட்டமாக உட்கார்ந்து பீடி சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்மணி சொல்வார் நேற்று இரவு 12 மணி இருக்கும், அந்த அடி பம்பில் டங்கு டங்கு என்று சத்தம் கேட்டது என்று சொன்னதும், அடுத்த பெண்மணி சொல்வார் அப்படி என்றால் அந்த மோகினி பேயின் வேலையாக தான் இருக்கும் என்று.

 

உடனே அருகில் இருக்கும் இன்னொரு நபரோ ஆமாக்கா எனக்கும் நேத்து நைட்டு ஒரு மணிக்கு ஒரே கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது என்று கூறுவார், அந்த நேரத்தில் கதை கேட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் இரண்டு பேருக்கு நடுவிலேயே பயந்து பம்மி கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்போம்.

 

 

பேய் கதை கேட்ட அன்று இரவு முழுவதும் தூக்கமே வராது, அதை நினைத்துக் கொண்டு மறுநாள் காய்ச்சல் வந்தவர்களும் அதிகம் உண்டு, இந்தக் கதையை மறுநாள் பள்ளிக்கூடத்தில் சில நண்பர்களிடமும் சொல்வது வழக்கம்.

 

அந்த காலத்தில் இரவு 12 மணி என்றால் பேய் வரும் நேரம் என்று பயந்த காலம் போய், இப்பொழுது 12:00 மணி ஆனால் தான் மொபைலை வைத்துவிட்டு தூக்கமே வருகிறது,

 

அந்தப் பழைய நினைவுகளை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது, ஆனால் இப்போது உள்ள குழந்தைகளிடம் அந்த கதையை சொன்னால் நம்மை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள், அந்த அளவுக்கு விஞ்ஞானமும் காலத்தின் போக்கை மாற்றி விட்டது.

 

என்னதான் அது ஒரு மூடநம்பிக்கை பேய் என்பது இல்லை என்று வெளியில் சொன்னாலும், உள்ளுக்குள் பேயின் பயம் இன்றளவும் அதிக பேரிடம் இருப்பது என்னமோ உண்மைதான்.

 

ஆனால் ஏன் நம் முன்னோர்கள் அப்படி பேய் கதை சொல்லி வைத்தார்கள், உண்மையாகவே பேய் இருக்கிறதா இல்லையா என்பது இன்றுவரை தெரியாத விடையே.

 

நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே…. பேய் இருக்கா? இல்லையா?

 

என்ன இருந்தாலும் அது ஒரு கனா காலம்தான். கிராமத்து வாழ்க்கை என்றும் சொர்க்கமே…

Read Previous

மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவின் வழக்கு தள்ளுபடி..!!

Read Next

பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular