சிறுகதை:
அவளும் மகளே…!
“அப்பா… இன்னிக்கு என்ன விசேஷம் சொல்லுங்க…..” கேட்டான் குமார்
“அட…. அதெல்லாம் மறக்குமா டா… எங்க 50 வது திருமணநாள்… அதுக்கென்ன இப்போ…?” கேட்டார் ராஜாராமன்.
“இல்லேப்பா…. அதை நாம கொண்டாடப் போறோம்…”
“எதுக்குடா… அவளும் இல்லே… ஏதோ மனசுல பழைய நினைவுகளோட கொஞ்ச நேரம் கண்ணை மூடி பிரார்த்திக்கிறேன்… அது போதும்டா…”
“இல்லேப்பா… அம்மா இருந்தா என்ன செய்வோம்… ?”
“அதுவா… காலைல எந்திரிச்சு குளிச்சு கோவிலுக்குப் போயிட்டு வருவோம். அப்புறம் உங்கம்மா செய்யற சர்க்கரைப் பொங்கலோட காலை டிபன்… மத்தியானம் பால் பாயாசம், அவியல், சாம்பார், மாங்கா பச்சடியோட சாப்பாடு. அப்புறம் தூக்கம். மாலையில் எல்லாருமா ஏதாவது ஓட்டல்ல போயி இரவுணவு… அம்புட்டுத்தேன்.”
“ஆமாம்பா… அதேதான்… காலைல உங்கள் மருமகள் கையால் செய்யற கேசரி, வடை, பொங்கல்… மதியம் மாலா கையால் சுடச்சுட தயார் பண்ணி சிறப்பாக வாழையிலைச் சாப்பாடு, வடை பாயசத்தோட… மாலையில் ஓட்டலுக்குப் போறோம்….சரிதானே.”
” எல்லாம் சரிதான்…. அவளில்லாம இது தேவையான்னு தான்….”
“தப்புப்பா… அவ இல்லாம… அவ இல்லாமன்னு சொல்லாதீங்க… அம்மா நம்மோடதான் இருக்கா… இன்னிக்கு நீங்க, நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்னா….அதை அம்மா தாம்பா வழி நடத்தறா….”
“அப்போ…. என்னால ஒரு பிரயோஜனமும் இல்லேங்கறயா… சும்மா தின்னுட்டுத் தூங்கிட்டு இருக்கேனா…. ஹி… ஹி… ஹி. சும்மா. … வெளையாட்டுக்குச் சொன்னேன்… உண்மையிலேயே நீ சொன்ன மாதிரி… அவதான் என் கூட இருந்து வழிகாட்டறா… மட்டுமில்லே. நம்பினாலும் சரி இல்லேன்னாலும் சரி… நான் எப்போதாவது வழி தெரியாமத் தடுமாறினா கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போறா…
சொன்னாத் தப்பா நெனைக்கப்படாது. எல்லாரையும் சொல்லலே… சிலபேர் மனைவியையோ வேறு துணைகளையோ இழந்துட்டா… உடனே குடியை நாடறாங்க. குடிச்சிட்டு குடலை ஈரலை அழிச்சுக்கறாங்க… பிள்ளைகளுக்குத் தொந்தரவா இருக்காங்க… படுக்கையில் கிடந்து எல்லோர் அமைதியையும் கெடுத்துக் தானும் கெட்டு சாவுறாங்க… எதற்குமே போதை ஒரு மருந்தல்ல. ஏதோ துன்பங்களை மறக்கக் குடிக்கறதாச் சொல்வாங்க… சில மணித்துளிகள் மயக்கம்… அதை நாம் தூக்கத்திலேயே அடையலாம். போதை தீர்ந்தா …? மீண்டும் மீண்டும்… அதற்கு முடிவு தான் என்ன. அதெல்லாம் வேண்டாம். நினைவுகளை மறக்க என்கிறீர்களே.. …
அதை ஏன் மறக்க வேண்டும்… அந்த இனிய நினைவுகளோடயே வாழலாமே. என் மனைவி என்னை விட்டுப் போயிட்டான்னு ஏன் அழணும். அவளோட இருக்கும்போது நடந்த சந்தோஷமான சம்பவங்களை… அவளது நடை உடை பாவனைகளை… நினைவில் நிறுத்தி ரசிக்கலாமே.”
“ஆமாம்பா… நன்று… நான் வேலைக்குப் போயிட்டு வரேன். அதுவரை மருமகளோட உங்கள் நினைவுகளைப் பரிமாறுங்க… அவளும் பரிமாறுவா… சாப்பிடுங்க… ஓய்வெடுங்க… மாலையில் வெளியில் போகலாம்.” தயாராயிருங்க. மாலா… அப்பாவைப் பாத்துக்க… நான் வரேன்.” குமார் புறப்பட்டான்.
மாலா வந்தாள் “அப்பா… பூஜையெல்லாம் முடிச்சாச்சா…. வாங்க சாப்பிடலாம்….”
“மாலா… இன்னிக்கு நீ வேலைக்குப் போகலையா…?”
“இல்லேப்பா…. விடுப்பு எடுத்திருக்கிறேன்.”
“எதுக்கும்மா… அப்படியென்ன தலைபோற விஷயம்?”
“என்னப்பா… என்னிக்கும் அவசர அவசரமா வெந்தது பாதி வேகாது பாதின்னு… உப்பில்லாம கிப்பில்லாம சப்புனு செஞ்சு வைச்சுட்டுப் போறேன். அதை பரிமாறக் கூட ஆளில்லாம என்னமோ சாப்பிடறீங்க. இன்னிக்கு அப்படியில்லே… அம்மாவோட ஆசீர்வாதத்தோட சுடச்சுட செய்து பரிமாறுவேன் சாப்பிடணும்… இப்ப வாங்க டிபன் சாப்பிடலாம்…”
“மாலா… நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே…”
“என்னப்பா…?”
“ஒன்னுமில்லே … எப்படிம்மா பொறுமையா எனக்காகப் பாத்துப் பாத்து செய்யமுடியுது. ? சலிப்பால்லே.”
“இதோப்பாருங்க… அப்படி இப்படின்னு சொல்லி என்னை வெறுப்பேத்தாதீங்க… அம்மா என்ன செய்வாளோ அதைத்தான் செய்யறேன்… அம்மா இல்லாத குறை உங்களுக்கு தெரியப்படாது. அது மட்டுமில்லே… அம்மா உங்க நெஞ்சுல பசுமரத்தாணியா எழுதினதெல்லாம் அவ்வளவு எளிதாக அழிக்க முடியாது. அதனால அந்த அழியாத நினைவுகளோடு நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்… இப்ப… வாங்க… சாப்பிடலாம்.”




