நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் இன்று வேப்பம் பூவை வைத்து ஒரு உணவை எப்படி செய்வது என்றும் அதில் இருக்கும் நன்மைகளையும் காண்போம். வேப்பம் பூவை கொண்டு வேப்பம்பூ ரசம் வேப்பம்பூ பச்சடி வேப்பம்பூ பொடி என விதவிதமாக செய்யலாம். இதில் நாம் இன்று வேப்பம்பூ சாதத்தை எப்படி செய்வது என்று காண்போம்.
இந்த வேப்பம்பூ செரிமானத்தை சீராக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து தீர்வு தரும். நமது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி நமது ரத்தத்தை சுத்தம் செய்யும் இது மட்டுமில்லாமல் எடை இழப்புக்கு இந்த வேப்பம்பூ மிகவும் உதவும். இதில் இருக்கும் கசப்பு தன்மை நமது குடலில் ஏதேனும் பூச்சிகள் இருந்தால் அதை வெளியேற்ற செய்கிறது. நமது ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தி வாயு தொல்லை வயிற்று வலி போன்றவற்றிலிருந்து விடுபட செய்கிறது இந்த வேப்பம்பூ.
தேவையானவை:
உதிரான சாதம் – 1 கப்
வேப்பம் பூ – கால் கப்
எண்ணெய் அல்லது நெய் – 4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கியது – கால் கப்
சீரகம் பொடித்தது – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – தாளிக்க
கடுகு, உ.பருப்பு, வர மிளகாய் – தேவைக்கு
உப்பு – ருசிக்கேற்ப
செய்முறை:
ஒரு கடாயை எடுத்து அதில் நெய் அல்லது எண்ணெய் விட்டு முதலில் தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் வேப்பம்பூவை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கும்போது மிளகுத்தூள் சீரகத்தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். அதன்பின் சாதத்தை அதில் போட்டு தேவையான அளவு உப்பை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வேப்பம்பூ சாதம் தயார்.




