மெக்சிகோவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற துணிச்சலான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவின் சான் மிகுஎல் டோடோலாபன் பகுதியில், ‘எல் டெக்கில்ரோ’ என்ற கேங்ஸ்டர் கும்பல் என்ஜினியரான இசையாஸ் வல்டேஸ் என்பவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது மனைவி யாதிரா கியூலர்மோ கார்சியா, காவல்துறையின் நடவடிக்கைக்காக காத்திருக்காமல் கிராம மக்களை திரட்டி, கேங்ஸ்டர் தலைவனின் தாயாரையும் சில கூட்டாளிகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், “என் கணவரை பத்திரமாக விடுவித்தால் மட்டுமே உன் தாயை விடுவிப்பேன்” என்று ஊடகங்கள் வாயிலாக அவர் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இறுதியில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடத்தப்பட்ட என்ஜினியர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதுடன், கேங்ஸ்டர் தலைவனின் தாயாரும் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்தப் பெண்ணின் துணிச்சலையும் தைரியத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.




