சப்பாத்தி, பூரி, பரோட்டா ஆகியவற்றிற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைத்தால், மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சுவையில் மட்டன் கோலா உருண்டையை நினைவூட்டும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு:
- பொட்டுக்கடலை – 1/4 கப்
- சோம்பு – 1 டீஸ்பூன்
கோலா உருண்டைக்கு:
- மீல் மேக்கர் – 1 கப்
- சுடுநீர் – தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கிரேவிக்கு:
- பட்டை – 3 துண்டுகள்
- கிராம்பு – 3
- சோம்பு – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 2 (அரைத்தது)
- இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- தக்காளி – 2 (அரைத்தது)
- மிளகாய்த்தூள் – 3/4 டீஸ்பூன்
- மல்லித்தூள் – 1 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- கசூரி மெத்தி – சிறிதளவு
- கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க
செய்முறை
முதலில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் சுடுநீரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, அதில் மீல் மேக்கரை போட்டு 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி, உள்ளிருக்கும் நீரை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
பிழிந்த மீல் மேக்கரை மிக்ஸியில் லேசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதனுடன் அரைத்த பொட்டுக்கடலை கலவை, மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக பிசையவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி தயாரிக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, உருட்டி வைத்துள்ள கோலா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இறுதியாக பொரித்த கோலா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து, கசூரி மெத்தி தூவி மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், மணமும் சுவையும் நிறைந்த மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவி தயார்.
சூடான சப்பாத்தி, பூரி அல்லது பரோட்டாவுடன் பரிமாறினால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.




