நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ், ‘ஜனநாயகன் பாஸ்போர்ட்’ என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
“ஜனநாயகனைக் கொண்டாடுவோம்… பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்!” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, திரைப்படக் கொண்டாட்டங்களுடன் சமூகப் பொறுப்புணர்வையும் இணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் மூலம், ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயகக் கடமைகள் மற்றும் சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையைப் பேணுதல், மனிதநேயம், சட்டங்களை மதித்தல் மற்றும் பொது இடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பொறுப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதனை பின்பற்ற உறுதிமொழி எடுக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
“திரையில் ஜனநாயகன்… சமூகத்தில் பொறுப்புள்ள நாயகன்” என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்ற நிலையில், திரைப்படக் கொண்டாட்டங்களை சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுடன் இணைக்கும் புதிய முயற்சியாக இது கவனம் பெற்றுள்ளது.




