பஞ்சாப் மாநிலத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 20 வயது இளம்பெண், தனது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே அமிர்தசரஸ்–பட்டிண்டா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மஹாக்பிரீத் கவுர் என்பது தெரியவந்தது. அவர், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த மே 4-ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த ஜகதீப் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு பதிண்டா மாவட்டத்தில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த திங்கள்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் கோட்கபுரா நோக்கி சென்றபோது, இளம்பெண்ணின் குடும்பத்தினர் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, மஹாக்பிரீத் கவுர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் இருந்து அவரது கணவர் ஜகதீப் சிங் உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார், தடயவியல் ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.




