தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக தமிழ்நாட்டை நோக்கி பயணம் தொடங்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ராஜசமந்த் மாவட்டத்தின் கான்க்ரோலி பகுதியைச் சேர்ந்த ஃபரித் ரங்ரேஸ், விஜய்யின் தீவிர ரசிகர். எந்தவித வாகனங்களையும் பயன்படுத்தாமல், கால்நடையாகவே தமிழ்நாட்டை அடைந்து முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
கான்க்ரோலியில் உள்ள ஃபவாரா சவுக்கில் இருந்து தொடங்கிய அவரது பயணத்திற்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வழியனுப்பினர்.
தனது பயணம் குறித்து பேசிய ஃபரித் ரங்ரேஸ், “விஜய்யை ஒரு நடிகராக மட்டுமல்ல, மக்கள் நலனுக்காக பணியாற்றும் தலைவராகவும் மதிக்கிறேன். அவரை நேரில் சந்திப்பதே என் கனவு. அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாட்டை அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பாதயாத்திரை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.




