தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி குருவலட்சுமி (35). அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் (47) என்பவருடன் குருவலட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகள் வளர்ந்த நிலையில், அந்தத் தொடர்பை கைவிட்ட குருவலட்சுமி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அவரை வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி குருவலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற சின்ன கெங்குராஜ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதுடன், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் 45 சதவீத தீக்காயம் அடைந்த குருவலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குருவலட்சுமி மரண வாக்குமூலம் அளித்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே சின்ன கெங்குராஜை கைது செய்திருந்த ஓட்டப்பிடாரம் போலீசார், தற்போது வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.




