ஆணழகு👌👌
உடற்பயிற்சி செய்து,உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் மட்டுமே அழகு கிடையாது.
சரி ,அப்போது ஆண்களின் அழகு என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
“டேய் ,கண்ணா உனக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்கா டா” ,என ஆனந்த கண்ணீருடன் அம்மா கூற,
தன் தங்கையை முதன்முதலாக அளவற்ற புன்னகையுடன் ஆசையோடு தொட்டு பார்க்கும் அந்த “அழகு”.
“அம்மா துணிதுவைக்க போறேன் ,பாப்பா அழாம பத்திரமா பாத்துகோடா ” என கூறி அம்மா சென்றதும்
வீல் என அழும் பாப்பாவின் அழுகையை நிப்பாட்ட தூளியை ஆட்டிவிட்டு அக்கறையோடு பார்த்துக்கொள்ளும் அந்த குட்டி அண்ணன் “அழகு “.
நீ தான் பெரியவன்ல ,அவ சின்ன பொண்ணு தானே ,கொஞ்சம் விட்டுக்குடுத்து போடா ,நம்ப பாப்பா தானே.
தான் வைத்திருந்த 5 மிட்டாய்களையும் தன் தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் அந்த “அழகு “.
விடலை பருவத்தில் முளைத்த அரும்பு மீசையை கண்ணாடியில் ரசிக்கும் அந்த “அழகு “.
காதல் தேர்வெழுதி காத்திருக்கும் காதலன் அழகு.
காதலி ஓகே சொன்னதும் தன்னையே மறந்து வெட்கப்படும் அந்த “அழகு” .
மணமகள் வெட்கபட்டு தலைகுனிந்து இருப்பதை ரசிக்கும் மணமகன் அழகு.
தலையை ஆம் என ஆட்டியபடி வெட்கத்துடன் புன்னகையித்த அவளை பார்த்த ஒற்றை நொடியிலே தான் அப்பா ஆவதை அறிந்த அவன் “அழகு”.
பத்து மாதம் ஒற்றை உயிரை அவள் உடலால் சுமந்த போது, மனதால் இரண்டு உயிர்களை சுமந்த அவன் அழகு.
பிரசவ வேதனையை அறையினுள் அவள் உடலால் அனுபவிக்க ,அறையின் வெளியே நடந்தபடி மனதால் பன்மடங்கு பிரசவ அனுபவித்த அவன் அழகு.
வாழ்த்துக்கள் உங்களுக்கு பையன் பொறந்துருக்கான் என நர்ஸ் சொன்னதை கேட்டதும் ஆனந்த கண்ணீர் விடும் அவன் அழகு.
அறையினுள் சென்றதும் அவளின் நெற்றியில் முத்தமிட்டு ,தன் குழந்தையை முதன்முதலாக தொட்டு தூக்கும் அவன் அழகு.
அழும் குழந்தையை தன் மார்போடு அணைத்து,இரவு முழுவதும் நடக்கும் அவன் அழகு.
அசதியாக இருக்கும் அவளுக்கு அக்கறையுடன் தேநீர் போட்டு குடுக்கும் அவன் அழகு.
அம்மாவா அல்லது அவளா என்ற சூழ்நிலையில் முழி பிதுங்கும் அவன் விழி அழகு.
மகன் கண்ணுக்கு ஹீரோவாக தெரியும் அவன் அழகு.
குடும்பத்திற்காக உலகின் எங்கோ ஒரு மூலையில்,தன் வாழ்நாளில் பாதியை இழந்து, கடினப்பட்டு வேலை பார்க்கும் அனைத்து “அவன்”களும் அழகு .
முதுமை பருவத்தில் அவனின் பொக்கை பல் அழகு.
தள்ளாடும் வயதிலும் அவன், அவள் மேல் வைத்திருக்கும் காதல் அழகு.
தன் பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவி மறுபடியும் குழந்தையாய் மாறும் அவன் அழகுக்கெல்லாம் அழகு,
“ஆணழகு”.




