ஒரு காதல் கடிதத்தில் இருந்து.. அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

உன் மஞ்சள் ஆடை புகைப்படத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் .இப்போதே கொஞ்சம் எலுமிச்சை வாசனை வேண்டும் போல் இருக்கிறது.தாகம் போல் ஒரு உணர்வு .தனியாக எங்கேனும் பைக்கில் போக வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் எங்கென்று தெரியவில்லை.வெகு தூரத்திற்கு.அங்கு சென்று உன்னை நினைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான் .நமக்கான தனிமை என்று பாவித்துக் கொள்கிறது மனம்

தற்செயல் மாதிரி சில ரசனை ஒற்றுமைகள் அவ்வளவு ஆச்சர்யமளிக்கின்றன .ஒரே திரைப்படத்தில் அதே பாடலில் வரும் ஒரு துணை நடனக்காரனின் மேன்லினெஸ் பற்றி, பிறகொரு காதல் காட்சியில் பயன்படுத்தியிருக்கும் அரங்க பொருட்கள் ஒரு பாத்திரமாக மாறியிருந்தது பற்றி (சார்லியின் அறை) மழைக்குள்ளே பாடலில் வரும் காமிரா, அந்த குட்டி போன்சாய்,இந்த சொற்கள் ஏன் தீர்வதே இல்லை. நிச்சயமின்மை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் நதியின் விழும் கரைமரத்தின் நிழல் இந்த உணர்வு.ஒரு காகிதம் எரிவது மாதிரி ஆர்ப்பாட்டம் அற்ற மெல்லிய வேட்கை.

வளர்ப்புப் பறவைகளிடம் பேச இன்னுமோர் ரகசியம் கூடி இருக்கிறது என்கிறாய்.வளர்ப்புப் பிராணியை இன்னும் அதிகமாய் தழுவிக் கொள்கிறேன். அது மடியுறங்கும் நேரத்தை நீட்டித்து அனுமதிக்கிறேன்.எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு மென்பதட்டம்.இடி விழுந்த நிலத்தின் அருகே உள்ள குளத்து நீரின் ஆழத்தில் அசையும் தாவரமாய் ஒரு நடுக்கம் இருக்கத்தான் இருக்கிறது.

சகல அறிதலுக்கும் பிறகு ஒரு சிறிய விசித்திரத்தை நம் உலகில் பரவ விட யாரேனும் வந்து விடுகிறார்கள்.தன் கருணையின் தூய பாகத்தை ,தன் ரகசியங்களை, தன் குற்றங்களை, தன் தழும்புகளை நமக்காய் காத்திருந்தது போல் திறந்து வைக்கிறார்கள் .

இவ்வளவு பற்றுதலுக்கு முன் நான் எளிய பிராணி,இத்தனை நம்பிக்கைக்கு நான் உகந்தவன் அல்ல என்று மெல்லிதான அச்சத்தோடு நிற்க வைக்கிறார்கள்

இதுதான் கடைச்சித் தீக்குச்சி இந்த சுடரை அணையாமல் பார்த்துக் கொள்.இனி வலி தாங்க திராணி இல்லை.ஒப்புக் கொடுகிறேன். என்னை இதே திமிரோடு வாழ அனுமதி. என் சுதந்திரத்தின் திசைகளை மதி .உடன் வா என்கிறது ஒரு குரல்..

எங்கிருந்தாய் இவ்வளவு காலம்.முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.பிறகு இவ்வளவு வலிக்குப் பிறகுதான் உன் அன்பின் ஆழத்தை உணர முடிந்தது.இந்த தருணத்திற்குத்தான் அவ்வளவும் போல என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறது..

Read Previous

ஆறு வழிகளை நீங்கள் கடைப்பிடித்தால்.. உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் தீர்வதுடன், வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது..!!

Read Next

படித்ததில் கண்ணீர் வரவைத்த பதிவு..!! அம்மாவைப் பற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular