பலரின் சுமைகளை சுமந்த சுமைதாங்கி கல்.
நமது கலாச்சார பாரம்பரிய அடையாளங்கள் பலவும் இப்போது மறைந்து விட்டது. அதில் ஒன்றுதான் சுமைதாங்கி கல்.
இப்போது 40-50 வயதில் இருக்கும் பலரும் அதை பார்த்திருப்போம். நம்முடைய முன்னோர்கள் அதை பயன்படுத்தினார்கள்.
இன்றைய தலைமுறைகளுக்கு சுமைதாங்கி கல்மேடை என்றால் என்னவென்றே தெரியாது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்தில் மக்கள் நடந்தே சென்றார்கள். அப்போது தலைசுமையை இறக்கி வைப்பதற்காக ஆங்காங்கே சுமைதாங்கி கற்கள் வைக்கப்பட்டன.
தரையில் இருந்து 4 அடி உயரத்துக்கு இரண்டு கல் தூண்கள். ஒன்றரை அடி அகலம் 6 அடி நீள கல் பலகை ஒன்று அந்த இரு தூண்கள் மீதாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு சுமைதாங்கி கல் மேடையின் அமைப்பு இதுதான்.
சில இடங்களில் சுமைதாங்கி கற்களில் கல்வெட்டு போல வாசகங்களும் எழுதியிருக்கும் அதன் பின்னே ஒரு வரலாறு ஒளிந்திருக்கும்.
ஒரு வீட்டில் பெண் கருவுற்று குழந்தை பிறப்பதற்கு முன்பாக வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் இறந்துவிட்டால், அதன் நினைவாக அந்த ஊருக்கு வெளியே சாலையோரமாக சுமைதாங்கி கல் மேடை அமைப்பது வழக்கம். அதாவது அந்தப் பெண் தன் வயிற்று சுமையை இறக்கி வைப்பதற்காக என்று ஒரு ஐதீகம்.
காலப்போக்கில் இந்த வழக்கம் இல்லாமல் போய்விட்டது.
உங்கள் ஊரில் கூட இப்படிப்பட்ட சுமைதாங்கி கற்கள் சாலையோரமாக இருந்தால் அதைப் பராமரித்து நம் பாரம்பரியம் காக்க முன் வாருங்கள். இதன் பெருமைகளை நம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுங்கள்.




