Oplus_131072
பதவி வரும் போது பணிவு
வர வேண்டும்…
ஒரு நாட்டை ஆண்ட, ஆணவம் மிக்க மன்னரின் குரு, காட்டிலுள்ள முனிவர்களைப் போய் சந்திக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
மன்னரும் படை, பட்டாளத்துடன் காடு வந்து சேர்ந்தார். காட்டிற்குள் வேட்டைக்கு சென்ற மன்னர், அங்கிருந்த மரத்தடியில் இருந்த ஒரு முனிவரைப் பார்த்தார்.
“முனிவரே! நீர் என்னுடன் என் நாட்டுக்கு வர வேண்டும்,” என்றார்.
“அப்பனே! எனக்கு இங்கு எந்தக் குறையுமில்லை. அங்கு வந்து என்ன செய்யப் போகிறேன்,” என்றார் முனிவர்.
மன்னர் அவரிடம்,“நீர் அங்கு வாரும். உமக்கு பொன்னும், மணியும், பொருளும் தந்து பெரும் செல்வந்தன் ஆக்குகிறேன்,” என்றார்.
“அதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அவற்றில் எனக்கு நாட்டமில்லை,” என்றார் முனிவர்.
மன்னர் அவரை வற்புறுத்த, முனிவர் தன் முடிவில் திடமாக இருந்துவிட்டார்.
இது மன்னரின் கோபத்தை கிளறியது.
“முனிவரே! நீர் மட்டும் என்னுடன் வராவிட்டால் உம்மைக் கொன்று விடுவேன்,” என்று எச்சரித்தான்.
முனிவர் சத்தமாகச் சிரித்தார்.
“ஏய் சக்கரவர்த்தி! நீ முட்டாள் என்பதை நிரூபித்து விட்டாய். உன் வாள் என் உடலையே கொல்லும். ஆனால், என் ஆன்மாவை அழிக்க உன்னால் முடியுமா? நான் இறந்தே போனாலும் கூட எங்கோ இருந்து என் ஆன்மிகப் பணியைச் செய்வேன்,” என்றார்.
மன்னருக்கு உண்மை உரைத்தது.
‘உடல் என்றாவது ஒருநாள் அழியத்தான் செய்யும். ஆன்மாவை அழிக்க யாரால் இயலும்!
ஒரு ஆன்மிகவாதியால் மட்டுமே உடலைப் பற்றிய கவலையில்லாமல் திடமாக வாழ முடியும்’ என்ற முடிவுக்கு வந்தார்.
முனிவரிடம் மன்னிப்பு கேட்டார். தான் என்ற ஆணவத்தைக் கைவிட்டு, பணிவுடன் வாழப் பழகினார்…!
படித்ததில் பிடித்தது..!!




