நெல்லிக்காய் மகத்துவம் …
“An apple a day keeps the doctor away எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமொரு ஆப்பிள் சாப்பிடுவதென்பது எல்லோருக்குமா சாத்தியம்?
ஆப்பிளுக்கு இணையாக, ஏன், ஆப்பிளை விட அதிகமான நற்குணங்கள் வாய்ந்தது நெல்லிக்காய். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே ஆயுளும் ஆரோக்கியமும் இளமையும் நீடிக்கும்.
அதியமானால் ஔவையாருக்கு வழங்கப்பட்ட நெல்லிக்கனிக்கு, அன்று முதல் இன்று வரை மாறாத புகழ் உண்டு. ‘‘ஆந்திராவில் டிசம்பர் மாதம் செய்யப்படுகிற நெல்லிச்செட்டு பூஜை ரொம்பவும் பிரபலம். கார்த்திகை மாதம் சோம வாரத்தில் வீட்டிலோ, சிவன் கோயிலிலோ எங்கே நெல்லிமரம் இருந்தாலும் விளக்கேற்றி பூஜை பண்ணுவார்கள். பக்தி என்கிற விஷயத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தப் பூஜைக்குப் பின்னால், நெல்லி மரங்களைக் காப்பாற்றுகிற சின்ன முயற்சி தெரியும்…” ஆன்மிகத்தினுள் ஒளிந்திருக்கும் அறிவியல் தகவலுடன் பேச ஆரம்பிக்கிறார் பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.
‘‘நெல்லிக்காயை காயகல்ப மூலிகை என்றே சொல்லலாம். நரை, திரை, மூப்பு விலக்கும் அற்புதம் இது. எத்தனையோ முறை நெல்லிக்காய் ருசித்திருப்பீர்கள்… அதில் எத்தனை சுவைகளை உணர்ந்திருப்பீர்கள்? அடுத்த முறை அதைக் கவனியுங்கள். முதல் கடியில் துவர்ப்பு, அடுத்து லேசான உப்பு, பிறகு புளிப்பு, பிறகு உவர்ப்பு, கார்ப்பு என 5 சுவைகளையும், கடைசியாக நெல்லிக்காயை முழுவதும் உண்டு முடித்து தண்ணீர் குடிக்கிற போது ஆறாவதாக இனிப்புச் சுவையையும் உணரலாம். அறுசுவைகளையும் தன்னுள்ளே கொண்ட ஒரே காய் நெல்லிக்காய்.
100 கிராம் நெல்லிக்காயில் 600 மி.கிராம் வைட்டமின் சி சத்து உள்ளது. வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை மாதிரியான மற்றதை சமைக்காமல் அப்படியே சாப்பிட்டால்தான், முழுச் சத்தும் கிடைக்கும். ஆனால், நெல்லிக்காயில் மட்டும்தான், அதை எந்த வடிவத்தில் மாற்றினாலும் வைட்டமின் சி இழப்பு ஏற்படுவதில்லை. காய வைத்தாலோ, வேக வைத்தாலோ கூட அதன் வைட்டமின் சி அப்படியே இருக்கும். வைட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய ஸ்கர்வி என்கிற சருமப் பிரச்னைக்கு நெல்லிக்காய் மிகச் சிறந்த மருந்து. தினம் ஒரு நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சாதாரண காய்ச்சல், சளி, இருமல் பிரச்னைகள் வராது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுச் சத்து, இரும்புச் சத்து முதலியவை அடங்கியுள்ளன. ரத்தத்தில் கொலஸ்டிரால் படிவதையும், ரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தையும் நெல்லிக்காய் விலக்குகிறது. மூளை வளர்ச்சிக்கும் நெல்லிக்காய் ஏற்றது. நெல்லிக்காயில் நீர்ச்சத்தும் அதிகம். மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்பதால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் போகும். நெல்லிக்காய்க்கு பசியைத் தூண்டும் உணர்வு உண்டு. நெல்லிக்காய்க்கு கொழுப்பை விரட்டும் குணமும் உண்டு என்பதால் பருமன் பிரச்னை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் கொழுப்பு கரையத் தொடங்கும்.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு மிக முக்கிய இடமுண்டு. அவர்களது பெரும்பாலான மருந்துத் தயாரிப்புகளில் நெல்லிக்காயின் கலப்பு கட்டாயம் இருக்கும். மிகப் பிரபலமான திரிபலா சூரணம் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலப்பே. இன்று வயது வித்தியாசமின்றி, எல்லாப் பெண்களையும் பாதிக்கிற பிரச்னை அனீமியா என்கிற ரத்த சோகை. ரத்த சோகையை விரட்ட இரும்புச் சத்து அவசியம். இரும்புச் சத்து உடலினுள் கிரகிக்கப்பட வேண்டும் என்றால் வைட்டமின் சி அவசியம். எனவே, ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.




