Oplus_131072
கொத்தமல்லி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
கொத்தமல்லி விதையில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), குறைந்தளவு ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன.
இதில் இரும்புச்சத்து, செம்புச்சத்து மிகஅதிகளவும், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு அதிகளவும் உள்ளன. மேலும் இதில் பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய தாதுஉப்புகளும் உள்ளன.
இதில் கார்போஹைட்ரேட், அதிகளவு நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.
மேலும் இதில் பதினோரு வகையான முக்கிய எண்ணெய்களும், ஆறு வகையான அமிலங்களும் காணப்படுகின்றன.
கொத்தமல்லி விதை – மருத்துவ பண்புகள் :
சரும ஆரோக்கியத்திற்கு :
மல்லிவிதையின் நோய்எதிர்க்கும் பண்பானது சரும அரிப்பு, எக்ஸிமா, சரும அழற்சி, சருமதடிப்பு போன்றவை ஏற்படாமல் தடை செய்கிறது.
இது வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணையும் தடுக்கிறது. இதில் உள்ள லினீலியிக் அமிலம் வலி நிவாரணியாகச் செயல்பட்டு சருமஎரிச்சலுக்கு தீர்வளிக்கிறது.
நல்ல செரிமானத்திற்கு :
இதில் உள்ள எண்ணெய் செரிமானத்திற்குத் தேவையான நொதிகளைச் சுரந்து உணவினை நன்கு செரிக்க ஊக்கம் அளிக்கிறது. பசியற்ற தன்மையையும் இது நீக்குகிறது.
இதனுடைய தனிப்பட்ட மணத்தினை நாம் நுகரும் போது செரித்தலுக்குத் தேவையான நொதிகள் சுரப்பதால் செரிமானமின்மை, பசியின்மை ஆகியவை நீக்கப்படுகின்றன. ஆதலால்தான் நம்முடைய மசாலாவில் மல்லிவிதை கட்டாயம் இடம் பெறும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்க :
இதில் உள்ள லினீலியிக் அமிலம், ஒலிக் அமிலம், பாமிமிடிக் அமிலம், ஸ்டீரியிக் அமிலம் மற்றும் அஸ்காரிபிக் அமிலம் போன்றவை இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவை இரத்தநாளங்களில் படிந்து அடைப்பினை உண்டாக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து இதய நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
மேலும் இது கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கிறது.
வயிற்றுப்போக்கிற்கு :
இதில் காணப்படும் எண்ணெய்களான போர்னியோல் மற்றும் லினுலூல் போன்றவை கல்லீரலை நன்கு சுரக்கச் செய்து செரிமானத்திற்கு உதவுகின்றன.
இதில் காணப்படும் எண்ணெய்ப் பொருட்களான சினைல், ஹார்னையல், லிமோனைன், ஆல்பா-பினைன் மற்றும் பீட்டா பில்லாண்ட்ரீன் போன்றவை பாக்டீரிய எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுபோக்கிற்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது.
மல்லிவிதையினை வாந்தி, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு வீட்டில் கைமருந்தாக கொடுக்கும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.
உயர்இரத்த அழுத்தத்தைச் சீராக்க :
உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை உண்ணும்போது இரத்த அழுத்தம் சீராவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதில் உள்ள கால்சியம் அயனிகள் மற்றும் அசிட்டைல்சொலைன் இரத்த நாளங்களில் உண்டாகும் அழுத்தத்தைக் குறைத்து இதயநோய்களை தடைசெய்கிறது.
எலும்புகளை பலப்படுத்த :
எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் மற்றும் ஏனைய தாதுப்பொருட்கள் மல்லிவிதையில் காணப்படுகின்றன.
இதனால் மல்லிவிதையை உண்டு ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்களைத் தடுக்கலாம்.
மல்லிச்செடியின் மத்திய இலைகளில் கால்சியம் அதிகளவு காணப்படுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் இச்செடியின் மத்திய இலைகளை உண்ணலாம்.
அனீமியாவைத் தடுக்க :
இதில் இரும்புச்சத்து மற்றும் செம்புச்சத்து அதிகளவு காணப்படுகிறது. எனவே இதனை உண்ணும்போது இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த சோகை எனப்படும் அமீனியா தடுக்கப்படுகிறது.




