இதில் நமது உடலை இயற்கையாகவே குளிர்விக்கும் தன்மைகள் உள்ளன. இதை தயாரிப்பதும் மிக எளிதாகும்.
வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதில் இருந்து விடுபட நமது உடலை குளிர்விக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிக அவசியம். அந்த வகையில், கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள், பானங்கள் மூலம் உடல் சூட்டை தணிக்க உதவினாலும், கூடுதலாக வேறு சில விஷயங்களும் உள்ளன. அதுதான் பாதாம் பிசின். பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்ட இந்த பாதாம் பிசின் கோடைகால டயட்டிற்கு ஏற்ற ஒன்றாக அமைகிறது. இதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
குளிரூட்டும் பண்புகள்: பாதாம் பிசினில் நமது உடலை இயற்கையாகவே குளிர்விக்கும் தன்மைகள் உள்ளன. இதை தயாரிப்பதும் மிக எளிதாகும். முதலில், ஒன்று அல்லது இரண்டு துண்டு பாதாம் பிசினை எடுத்து அதனை நன்கு கழுவி ஒரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர், காலையில் அது ஜெல்லி போல மாறி இருக்கும். இதை பானங்கள் அல்லது இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து நமக்கு உடனடி நிவாரணம் கிடைத்து உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
நீரேற்றம், எலக்ட்ரோலைட் சமநிலை: நமது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகிறது. நமது உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து வழங்குவதற்கு இந்த பாதாம் பிசின் உதவுவதாக நம்பப்படுகிறது. கூடுதலாக எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதன் மூலமாக இந்த பாதாம் பிசின் தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. நீர்ச்சத்து இழப்பை தடுப்பதற்கும், நாள் முழுவதும் ஆற்றல் அளவுகளை பராமரிப்பதற்கும் நீங்கள் உங்களுடைய அன்றாட டயட்டில் பாதாம் பிசினை சேர்த்து சாப்பிடலாம்.
செரிமானம்: பாதாம் பிசின் நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இயற்கை லாக்சேட்டிவாக செயல்பட்டு பெரும்பாலான நபர்கள் கோடைகாலத்தில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. அது மட்டுமல்லாமல் அசிடிட்டி மற்றும் வயிற்றில் அல்சர் போன்ற அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள்: நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பிசின் நமது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை அளிக்கிறது. நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால் உடல் எடையை பராமரிக்க இது சிறந்ததாக அமைகிறது. அதே நேரத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களித்து, ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
சரும ஆரோக்கியம்: கோடை காலத்தில் நமது சருமம் மிக மோசமாக பாதிப்படையக் கூடும். சன்டேன், சன்பர்ன் மற்றும் வியர்க்குரு போன்ற வெளிப்புற பிரச்சனைகள் மட்டுமல்லாமல் கோடை நமது சருமத்திற்கு உட்புறமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பாதாம் பசின் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, அதனை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. பாதாம் பிசினை நீங்கள் ஃபேஸ் மாஸ்காகவும் பயன்படுத்தலாம்.
அன்றாட உணவில் பாதாம் பிசினை சேர்ப்பது எப்படி?: ரோஸ் மில்க் அல்லது பிற புத்துணர்ச்சியூட்டும் பானங்களோடு சேர்த்து பாதாம் பிசினை சாப்பிடலாம். மேலும் மில்க் ஷேக், ஃபலூடா அல்லது தயிர் போன்ற இனிப்பு வகைகளோடு ஊற வைத்த பாதம் பிசினை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு ஃப்ரூட் சாலட் பிடிக்கும் என்றால் அதில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த பாதாம் பிசின் சேர்த்து சாப்பிடுவது அதன் குளிரூட்டும் விளைவையும் அதிகரிக்கும். மேலும், பாதாம் பிசின் கருத்தரிக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்க உதவுகிறது.




