அக்னி நட்சத்திரம் ஏற்பட்ட கதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

இன்று அக்னிநட்சத்திரம் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் ஏற்பட்டதற்குக் காரணமான கதையொன்று மகாபாரதத்தில் உள்ளது.
அழகிய யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். இந்திரனுக்கு “காண்டவ வனன்” என்ற பெயரும் உண்டு.

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும், அர்ஜுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள்! எனக்கு அதிக பசி! என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும்; இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது! நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்! என்று கிருஷ்ணரிடமும், அர்ஜுனனனிடம் வேண்டினார்! அந்தணர்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார்!
வந்திருப்பது அக்னி தேவன் என கண்டு கொண்டார். அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே? என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காகத் துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து வேள்வி ஒன்றை நடத்தினார். வேள்வியின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது.
அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்தமூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்” என்றார் அக்னி தேவன்.

நல்லது!அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்றான் அர்ஜுனன். நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறார் என்றார் அக்னிதேவன்.

கண்ணபிரான், அர்ஜுனனைப் பார்த்து புன்னகைக்க, அதன் பொருளைப் புரிந்துகொண்ட அர்ஜுனன், அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு எப்பொழுதும் குறையாத அம்புகள் எனக்கு வேண்டும்!என்றான் அர்ஜுனன். உடனே, அர்ஜுனனுக்காக, அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணியைக் கொடுத்தார்! அக்னி பகவான்.

அப்பொழுது கண்ணன்
அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக. இருபத்தியொரு நாட்கள் மட்டும் இந்தக் காட்டை நீ உண்ணலாம்! அந்த நேரத்தில் இந்திரன் மழைபொழியாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்! என்றார் ஶ்ரீகிருஷ்ணர்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க மேகங்களுக்கு உத்தரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன், அர்ஜுனனனைப் பார்க்க, அர்ஜுனனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க அம்புகளால் சரக்கூடம் அமைத்தான்.

அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார்.
அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டார்! அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணபிரானிடமும், அர்ஜுனனனிடமும் விடைபெற்று வெளியேறினார் அக்னிதேவன். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் ஆகும்.

அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை நாம் உண்ண வேண்டும்.இதில் முதல் ஏழு நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும், அடுத்த ஏழு நாட்கள் கடுமையாகவும், கடைசி ஏழு நாட்கள் வெப்பம் தணிந்தும் காணப்படும்.

சித்திரை முதல் நாளில் அசுவினி நட்சத்திரத்தில் நுழையும் சூரியன், பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. சந்திரனும், பூமியும், சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காரணம் என்கிறது விஞ்ஞானம்.

அக்னி நட்சத்திரத்தின் போது செய்ய வேண்டியவை :🙏
சூரிய நமஸ்காரம், முருகன் மற்றும் மீனாட்சியம்மன் வழிபாடு. விசிறி, நீர் மோர், தண்ணீர், பருத்தி உடைகள், உணவு போன்றவற்றை எளியோருக்கு வழங்க வேண்டும். குறிப்பாக 21 நாட்களும் யாரேனும் ஒருவருக்கு ஒருவேளையாவது தயிர் சாதம் வழங்குதலும் நன்று.🙏

அக்னி நட்சத்திரத்தின் போது செய்யக் கூடாதவை :🙏
செடி, கொடி வெட்டுவது, கிணறு வெட்டுவது, விதை விதைத்தல், குருவிடம் தீட்சை பெறுதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.🙏

அக்னி நட்சத்திரக் வேளையில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை இட்டு சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறைகள் துதிக்கலாம். அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி வடிவமாக இருக்கும் சிவபெருமானையும், தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழி பட வேண்டும்! என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன! புராணங்கள்.

Read Previous

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்.. தெரியுமா..??

Read Next

அப்பாக்கள் ஒரு வரம்..!! படித்ததில் கண்கலங்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular