பழமை பழமைதான் படித்ததில் பிடித்தது..!!

பழமை பழமைதான் படித்தது
…எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் எட்டுபேர் இருந்ததால்… இட்லி தோசைக்கு மாவரைப்பதெல்லாம் ஒரு ப்ராஜெக்ட் வொர்க் போலவே இருக்கும்…

பாவம்… என் தாயார்…

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாவது ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தால்தான்…எங்கள் அத்தனைபேருக்கும் டிபன் கிடைக்கும்…

நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயத்தில்… ஒரு நாள் பாட்டி ஆரம்பித்தார்..

“பதிமூணு வயசாறது..
இந்த வயசுல ஒங்கப்பன் எனக்குப் பொறந்துட்டான்…

நீ என்னடான்னா, படிச்சவன் பொழப்பக் கெடுத்தான்கற மாதிரி, கையில எப்பவும் ஏதோ ஒரு புக்கை வெச்சுண்டு ஒக்காந்துருக்கே.

போ… போய் ஒங்க அம்மாவுக்கு ஒத்தாசையா கொஞ்சம் மாவரைச்சு கொடு…”

…எனக்கும் அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்ததால்,
“நகரும்மா… நான் அரைச்சுத் தரேன்…” என்று பாசத்தோடு(!) கூறி,

….என் தாயாரை… அவர் “வேண்டாம்” என்று மறுத்தும், அவரைப் பலவந்தப்படுத்தி, அவர் பாதி அரைத்து வைத்திருந்த மாவை அரைக்க ஆரம்பித்தேன்..

சிறிது நேரம் கூட போயிருக்காது..

கை வலிக்க ஆரம்பித்தது..

மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பாட்டியிடம், சற்றைக்கொரு தரம்

“பாட்டி அரைச்சது போறுமா பாட்டி?.” என்று கேட்க ஆரம்பித்தேன்..

“இல்ல… போறாது… இன்னும் அரைக்கணும்…” என்பதையே நிரந்தரமான பதிலாக அவர் சொல்லிக் கொண்டிருந்தார்…

ஒருகட்டத்தில், எனக்கு கை மிகவும் வலிக்கவே…
“போங்கோ பாட்டி… எப்போ கேட்டாலும் போறாது போறாதுனு ஒரே பதில சொல்லிண்டிருக்கேள்…

நன்னா பாருங்கோ… பருப்பெல்லாம் நன்னா அரைச்சாச்சு…” என்று சற்றுக் கோபமாகப் பேசினேன்..

பாட்டி வழக்கம்போல் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு,

“போடுவான் (அரிசிக்குக் “கூட”ப் போடுவதால், ஊற வைத்த உளுந்தை எங்கள் வீட்டில் “போடுவான்” என்று கூறுவார்கள்) எல்லாம் “கொட கொட”னு சத்தம் வரவரைக்கும் அரைக்கணும்..

அதுக்கென்ன பண்றது?..

கல்லுல போடுவான் அரைக்கறதும் ஸ்ரமம்..

கல்யாண ஆன பொண்ணு பொறந்தாம்(பிறந்த வீடு) போறதும் ஸ்ரமம்தான்…

நன்னா அரை.. அப்போதான் இட்லி “மெத்து மெத்து”னு வரும்..”
…என்று பாடம் எடுத்தார்…

இன்றைக்கும்கூட உரலில் “போடுவான்” அரைக்கும்போது பாட்டி ஞாபகம் வருகிறது..

பரபரப்பாக இருந்த காலத்தில் மிக்ஸி, க்ரைண்டர் என்று வைத்திருந்த நான்… இப்பொழுது அவற்றை எல்லாம் ஒரு அவசரத்திற்குத்தான் உபயோகிக்கிறேன்…

மற்றபடி எல்லாம் அம்மி…உரல்தான்…

என்னதான் சொல்லுங்கள்…

அவற்றில் அரைத்துச் சாப்பிடும்போது, அதன் ருசியே அலாதியாகத்தான் இருக்கிறது!

இதைச் சொல்லும்போது, என்பாட்டி, “நாக்க இழுத்து வெச்சு அறு..” என்று என்னை வசைபாடுவதுபோல் கண்முன்னே காட்சி விரிகிறது…

ஆனால்… இப்படி அம்மி, ஆட்டுக்கல் என்று இறங்கியதன் பின்னணி…

ஒரு சில வருடங்களுக்கு முன் நான் படித்த ஒரு துணுக்குதான்…

“நாமே கைய கால அசைச்சா… அதுக்குப் பேர்…. #எக்ஸர்ஸைஸ்…

அடுத்தவா வந்து நம்ம கைய கால அசைச்சா…. அதுக்குப் பேர்…!#
#பிஸியோதெரபி…

 

Read Previous

உள்நாக்கு மற்றும் ரொன்சில்ஸ் பலரும் அறிந்திராத தகவல்கள்..!!

Read Next

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular