கணையம் காப்போம்..!! ஆரோக்கியமாக வாழ்வோம்..!!

Oplus_131072

 

ஆரோக்கியம் அறிவோம் :

மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு, நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியமே அடிப்படையாக அமைகிறது.

நவீன உலகில், மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உண்டாகின்றன.

இதில் வயிற்று உபாதைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் பெருகி வருகிறது.

இதற்கு முக்கிய காரணியாக இருக்கும் கணையம் பற்றியும் அதன் பாதுகாப்பு குறித்தும் அறிதல் அவசியமாகிறது.

மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கணையம் இரண்டு முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது.

முதலாவதாக உணவு செரிப்பதற்கு தேவைப்படும் நொதிகளைச் சுரக்கச் செய்கிறது.

இந்த நொதிகள் புரதங்கள், கார்போ-ஹைட்ரேடுகள் மற்றும் கொழுப்புகளை உடைத்து உடலுக்கு சக்தியாக மாற்றுகின்றன.

இரண்டாவதாக இது ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இன்சுலின் மற்றும் கிளைக்கோஜன் ஆகியவற்றை சுரந்து நேரடியாக உடலில் கலக்கச் செய்கின்றன.

இதன் மூலம் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கப்பெறுகிறது.

கணையம் சேதமடைந்தால் செரிமானப் பிரச்சினை மட்டுமல்லாமல் நீரிழிவு நோயும் ஏற்படக்கூடும்.

ஆனால், கணையத்தில் அழற்சி என்பது உண்டானால், அது உயிருக்கே பாதிப்பினை ஏற்படுத்தும்.

பொதுவாக கணையத்தில் சுரக்கக்கூடிய திரவங்கள் குடலில் உள்ள உணவில் இருக்கும் கொழுப்பினை ஜீரணிக்க உதவும்.

ஆனால், இதில் அழற்சி ஏற்பட்டால், இந்த திரவங்கள் கசிந்து கணையத்தை முழுமையாக பாதிப்படைய செய்யும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் உள்ள மற்ற உறுப்புகளை செயல் இழக்கச் செய்யும்.

அதாவது கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றை பாதிக்கும். இந்த அழற்சி லேசான, மிதமான மற்றும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

மேல் வயிற்றில் தொடங்கி முதுகு வரை பரவும் கடுமையான வலி, குமட்டல், பசியின்மை, திடீர் எடை இழப்பு, மஞ்சள் காமாலை ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

இவற்றில் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

பித்தப் பையில் உண்டாகும் கற்களே கணைய அழற்சி ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.

ஆண்களுக்கு அதிக அளவு மது அருந்தும் பழக்கம், இப்பிரச்சினை ஏற்பட காரணமாகக் கூடும்.

இத்தகைய நிலை கண்டறியப்பட்டால் பித்தப் பையை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். இல்லை என்றால் திரும்ப கற்கள் உருவாகி மீண்டும் கணையத்தை பாதிக்கும்.

சரியான நேரத்தில் சிகிச்சையினை மேற்கொள்ளுதல், பெரும் ஆபத்தினை தவிர்க்க உதவும்.

அதேசமயம் பித்தப் பையினை நீக்குவது போல் கணையத்தினை நீக்கினால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும்.

பொதுவாக காணப்படும் மற்றொரு பிரச்சினை கணைய வீக்கமாகும்.

எளிதில் ஜீரணமாகக் கூடிய நார்ச்சத்து குறைந்த மற்றும் கொழுப்பில்லாத பழங்களை உட்கொள்ளுதல் இதற்கு சிறந்த தீர்வை அளிக்கும்.

பப்பாளியில் கணையத்திற்கு உதவும் நொதிகள் நிறைந்துள்ளதால் செரிமானம் எளிதில் நடைபெறும்.

ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் அதிகம் உள்ளதால் கணையத்திற்கு உகந்ததாக உள்ளது.

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை ஜீரண மண்டலத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகையைச் சேர்ந்த பழங்களும் கணைய வீக்கத்தைக் குறைக்கும் சத்துக்கள் கொண்டவை.

இந்தப் பழங்களை அப்படியே சாப்பிடாமல் சாறுகளாக அருந்துவது கணையத்தின் அதிக வேலைப் பளுவினைக் குறைக்கும்.

சமச்சீர் உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளுதல், எடை கட்டுப்பாட்டை பேணுதல் ஆகியவற்றின் மூலம் கணையப் பாதிப்புகள் வருவதைத் தடுத்து, நலமும் வளமும் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

 

Read Previous

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular