அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மலைப்பகுதியில், ‘சயானந்தஸ் ஹூக்கேரி’ (Cyananthus hookeri) என்ற அரிய மலர் 158 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காம்பானுலேசி (Campanulaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த அரிய மலர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரக்கூடியதாகும். இதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், ‘அருகிவரும் இனம்’ (Near Threatened) என்ற பிரிவில் வகைப்படுத்த இந்திய தாவரவியல் ஆய்வு மையம் (BSI) பரிந்துரைத்துள்ளது.
1867-ஆம் ஆண்டு முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட இந்த மலர், அதன் பின்னர் நீண்ட காலமாக காணப்படாத நிலையில், தற்போது மீண்டும் கண்டறியப்பட்டிருப்பது இமயமலைப் பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.




