குழந்தைகள் பொதுவாக முட்டைக்கோஸை தனியாக சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் அதே முட்டைக்கோஸை சுவையான சாதமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மதிய உணவுப் பெட்டிக்கும் ஏற்ற இந்த முட்டைக்கோஸ் சாதம், சுவையுடன் ஆரோக்கியத்தையும் தரும்.
தேவையான பொருட்கள்
- வடித்த சாதம் – 2 கப்
- முட்டைக்கோஸ் – 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- கேரட் – 1 (துருவியது அல்லது பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
- எலுமிச்சைச் சாறு – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1½ டீஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1½ டீஸ்பூன்
- வேர்க்கடலை – 3 டீஸ்பூன்
- முந்திரி – 5 முதல் 6
- வரமிளகாய் – 1
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்னர் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு, நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் கிளறி வதக்கவும்.
இப்போது வடித்த சாதம், தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து மிதமான தீயில் அனைத்தும் நன்றாக கலக்கும் வரை கிளறவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான மற்றும் சத்தான முட்டைக்கோஸ் சாதம் தயார்.
இந்த சாதத்தை தயிர், ரைத்தா, சிப்ஸ் அல்லது ஊறுகாயுடன் பரிமாறினால் சுவை இன்னும் அதிகரிக்கும்.




