• September 12, 2024

கஷ்டங்களைப் போக்கும் கால பைரவர் வழிபாடு..!! பூஜை செய்ய உகந்த நேரமும் முறையும்..!!

சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய சொரூபமே காலபைரவர் ஆவார். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் காலபைரவர். இவர் பொதுவாக நான்கு திருகரங்களுடன் காணப்படுவார். சில இடங்களில் அரிதாக 14 மற்றும் 32 திருகரங்களுடன் காட்சி தருவார்.

அனைத்து சிவன் கோயிலிலும் காலபைரவர் சன்னதி நிச்சயம் அமைந்திருக்கும். நாகத்தை பூனூலாகவும் பிறையை தலையிலும் அணிந்து காட்சி தருவார். சிவாலயங்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் காலபைரவர். பைரவர் என்று சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு உடனடியாக அருளை தரக்கூடியவர் காலபைரவர்.

காலத்தின் கடவுள் என்று சொல்லப்படுவதால் ஒருவரின் தலைவிதியையே மாற்றும் சக்தி கால பைரவருக்கு உண்டு. நவக்கிரகங்களையும் நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்த வல்லவர் என்பதால் இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியும். இவர் சனீஸ்வர பகவானின் குரு எனவும் அழைக்கப்படுகிறார். சனீஸ்வர பகவானுக்கு குரு என்பதால் காலபைரவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

காலத்தை கட்டுப்படுத்தும் வல்லமை படைத்த காலபைரவர், கருப்பான உக்கிரமான தோற்றம் கொண்டவர். இவரின் வாகனமாக நாய் உள்ளது. காலபைரவர் தீய சக்திகள்,செய்வினை, பில்லி, சூனியம் ஆகியவற்றை அழிக்க வல்லவர். காலபைரவரை வழிபடுபவர்கள் தீய சக்தியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. இவரை வழிபடுவதற்கு என்று சில நேரங்கள் மற்றும் பூஜை முறைகள் இருக்கிறது அவற்றைப்பற்றி விரிவாக காண்போம்.

காலபைரவரை வணங்குவதற்கு உகந்த நேரங்களாக சொல்லப்படுவது அஷ்டமி திதி ஆகும். காலாஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, பைரவாஷ்டமி, வளர்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் காலபைரவரை வழிபடுவது சிறப்பானது. நம்மை சூழ்ந்திருக்கும் கெட்ட நேரங்கள், மிகவும் கஷ்டத்தில் இருப்போர் காலபைரவரை தேய்பிறை அஷ்டமி திதி அன்று ராகு காலத்தில் வழிபட வேண்டும். நான்கு புறம் தீபம் கொண்ட விளக்கை நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மிளகு சேர்த்த உளுந்து வடை, தயிர் சாதம் ஆகியவற்றை பைரவருக்கு நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம். பூஜையின்போது கால பைரவாஷ்டகம் படிப்பது மிகுந்த பலன்களை தரும்.

தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால் அந்த தேய்பிறை போல நமது பிரச்சனைகளும் தேய்ந்து நல்லவைகள் நடக்க கால பைரவர் அருள் புரிவார் என்பது நம்பிக்கை. நம் தொழில் மேம்படவும், செல்வம் பெருகவும், நல்ல நேரம் கை கூடி வரவும் காலபைரவரை வளர்பிறை அஷ்டமி அன்று வழிபடலாம். வளர்பிறை அஷ்டமி அன்று நல்லவைகள் நடப்பதற்கு மட்டுமே வழிபட வேண்டும் அன்றைய தினம் நம் குறைகளை கூறி காலபைரவரை வழிபடக்கூடாது. சனியின் பிடியில் சிக்கி சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருபவர்கள், எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள், நோய்நொடியில் சிக்கி தவிப்பவர்கள் காலபைரவர் வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி அன்று தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்கள் பிரச்சினைகள் விலகி நன்மை உண்டாகும்.

Read Previous

100 கோடியை தாண்டிய ராயன்..!! 8 நாட்களில் எட்டிய உலக சாதனை..!!

Read Next

வயநாடு நிலச்சரிவு: உயிரை பணையம் வைத்த ராணுவ வீரர்கள்..!! 3ம் வகுப்பு மாணவரின் நெகிழ்ச்சி கடிதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular